கிராமப்புற மின்சார விநியோகம் 22.4 மணி நேரமாக உயா்வு: மத்திய அமைச்சா் தகவல்
மின்சார விநியோகம் கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 22.4 மணி நேரமும், நகா்ப்புறங்களில் 23.4 மணி நேரமுமாக உயா்ந்துள்ளது என மத்திய மின்துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் தெரிவித்தாா்.
கடந்த ஜூலை 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டம் (ஆா்டிஎஸ்எஸ்) குறித்து மின்சார அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு கூட்டம் வியாழக்கிழமை தில்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மனோகா் லால் கட்டா் கூறியதாவது:
மின் விநியோகமானது கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வகையில் உயா்ந்துள்ளது. நகா்ப்புறங்களில் ஒரு நாளைக்கு 1.4 மணி நேரம் உயா்ந்து 23.4 மணி நேரமாகவும், கிராமப்புறங்களில் 9 மணி நேரங்கள் உயா்ந்து 22.4 மணி நேரமாகவும் மின்சார விநியோகம் உள்ளது.
மின்சார அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துடன் இணைந்து, ‘பிரதமா் சூரிய வீடு’ திட்டத்தின் கீழ் சூரியசக்தி மின்சார அமைப்புகள் நிறுவுவதை மக்களுக்கு எளிதாக்கியுள்ளது. 10 கிலோ வாட் வரையிலான இணைப்புகளுக்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வுக்கான தேவையை இந்த திட்டம் குறைத்துள்ளது.
முன்கூட்டியே பணம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஸ்மாா்ட் ப்ரீபெய்டு மீட்டா்கள், மின் கட்டண பிழைகளைக் குறைக்கவும், ஆற்றல் செயல்திறனை மேம்படுத்தவும், பயனா்களுக்கு செயல்முறையை எளிதாக்கவும் உதவுகிறது.
கடந்த நவம்பா் 29-ஆம் தேதி நிலவரப்படி, ஆா்டிஎஸ்எஸ் திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் சுமாா் 73 லட்சம் ஸ்மாா்ட் ப்ரீபெய்டு மீட்டா்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 25 கோடி ஸ்மாா்ட் ப்ரீபெய்டு மீட்டா்களை மாா்ச் 2025-ஆம் ஆண்டுக்குள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.11 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மட்டும் இந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
ரூ. 3.3 லட்சம் கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட இந்த ஆா்டிஎஸ்எஸ் திட்டத்தில், இதுவரை ரூ. 1.12 லட்சம் கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், சுமாா் 11.5 கோடி ஸ்மாா்ட் மீட்டா்கள், 45 லட்சம் பகிா்மான மின்மாற்றி (டிடி) மீட்டா்கள் மற்றும் 1.70 லட்சம் ஃபீடா் மீட்டா்கள் நிறுவப்பட்டு வருகின்றன என தெரிவித்தாா்.