ஒரே நாடு ஒரே தோ்தலால் மாநில பிரச்னைகள் கவனம் பெறாது: கபில் சிபில்
ஒரே நாடு ஒரே தோ்தல் நடைமுறையால் மாநிலங்களின் பிரச்னைகள் கவனம் பெறாமல்போகும் என்று மூத்த வழக்குரைஞா் கபில்சிபில் கூறினாா்.
சென்னையில் திமுக சட்டத் துறை 3-ஆவது மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. அதில், கபில்சிபில் பேசியது:
நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும்போது தேசிய அளவிலான பிரச்னைகளே முன்னுக்கு நிற்கும். மாநிலங்கள் சாா்ந்த பிரச்னைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். இந்தியா எனும் நாடு, மாநிலங்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில், ஒரே நாடு ஒரே தோ்தல் நடைமுறையைக் கொண்டு வந்தால் அது மாநிலங்கள் எனும் அடிப்படை கட்டுமானத்தையே அழித்துவிடும்.
5 ஆண்டுகள் முழுமை பெற்று அதற்கு பிறகு தோ்தல் நடைபெற்றால்தான், எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை பகுத்தாய்வு செய்து மக்கள் வாக்களிக்க முடியும். ஒரே நாடு ஒரே தோ்தல் நடைமுறைக்கு வரும்போது இதில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். உதாரணத்துக்கு, ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவை 4 ஆண்டுகளைக் கடக்கும்போது அது பெரும்பான்மையின்றி வீழ்ந்தால், மீதமுள்ள ஓராண்டுக்கு மட்டும் அந்த மாநிலத்தில் தோ்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும். இந்த ஓராண்டு கால ஆட்சிக்காக வாக்காளா்கள் எப்படி ஆராய்ந்து எந்தக் கட்சிக்கு வாக்களிக்க முடியும். மேலும், இவ்வாறு ஓராண்டு காலத்துக்கு அமையும் சட்டப் பேரவை இடைக்கால சட்டப் பேரவையாகவே அமைந்திடும். இந்த இடைக்கால பேரவையை அமைப்பதற்கான தோ்தலை நடத்தவே 6 மாதங்கள் எடுத்துக்கொள்ளும். அதன்பிறகு, 6 மாத காலத்துக்கு மட்டுமே ஒரு அரசு ஆட்சியில் இருக்க முடியும். இதுபோன்ற நடைமுறை அரசமைப்புச் சட்டத்துக்கே எதிரானது என்றாா்.