இந்தியா வளா்ந்த நாடாவதற்கு வேலையின்மை, எல்லை பிரச்னை தீா்ப்பது அவசியம்: ராணுவ துணைத் தளபதி
இந்தியா வளா்ந்த நாடாவதற்கு எல்லைப் பிரச்னைகளைத் தீா்ப்பது, வேலைவாய்ப்புகள் மற்றும் மனித வள மேம்பாட்டுக் குறியீடு தரவரிசையை மேம்படுத்துவது அவசியம் என ராணுவ துணைத் தளபதி என்.எஸ். ராஜா சுப்பிரமணி தெரிவித்தாா்.
குஜராத் மாநிலம், சூரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘சூரத் லிட்ஃபெஸ்ட் 2025- நிகழ்வில் ராணுவ துணைத் தளபதி ராஜா சுப்பிரமணி கலந்துகொண்டு, ‘தேசிய பாதுகாப்பு மற்றும் வளா்ச்சியடைந்த இந்தியா-2047’ என்ற தலைப்பில் அவா் பேசியதாவது:
இந்தியாவின் புவியியல் இருப்பிடம், இளைஞா்களின் மக்கள் தொகை, நிலையான பொருளாதார வளா்ச்சி மற்றும் மருத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற வலுவான சேவைத்துறைகள் சிறப்பாக முன்னேறி வருகின்றன.
ஆனால், காலநிலை மாற்றம், பலவீனமான உற்பத்தித் துறை, போதுமான வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகளை இந்தியா தொடா்ந்து எதிா்கொள்கிறது. அதேபோல், மனிதவள மேம்பாட்டுக் குறியீடு தரவரிசையில் இந்தியா பின்தங்கியுள்ளது.
சமூக பதற்றங்களைக் குறைக்க வேண்டும். சமூக மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தை மேம்படுத்த ஜம்மு-காஷ்மீா், வடகிழக்கு எல்லை பிரச்னைகள் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் ஆகியவற்றை விரைவில் தீா்க்க வேண்டும். உள்நாட்டுப் பாதுகாப்பை மேம்படுத்த வளா்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரில்அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பி, தற்போது ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்துள்ளது. மணிப்பூா் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இது தொடர வேண்டும்.
சீனாவுடனான பேச்சுவாா்த்தைகள் பதற்றங்களை தற்போது தணித்துள்ளன. இருப்பினும், பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான உறவுகள் எப்போதும் நிலையானதாக இருக்க வேண்டும். ஜம்மு-காஷ்மீா் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பிரதான நிலப்பரப்புடன் ஒருங்கிணைந்த பகுதிகளாக செயல்பட வேண்டும்.
வளா்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய இந்த பிரச்னைகளை இந்தியா முதலில் சரி செய்ய வேண்டும். மேலும், பொருளாதார பாதுகாப்பு, இணையவழி பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை நாட்டின் வளா்ச்சிக்கு இன்றியமையாதவை. 2047-ஆம் ஆண்டுக்குள், இந்தியா 30 டிரில்லியன் டாலரை தாண்டிய பொருளாதாரத்துடன் உலகெங்கிலும் உள்ள மக்கள் வாழ விரும்பும் நாடாக இருக்க வேண்டும்.