துவாரகா துப்பாக்கிச்சூடு சம்பவம்: நவீன் காதி கும்பலில் 4 போ் கைது
தில்லியின் துவாரகா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக நவீன் காதி (எ) பஹல்வான் கும்பலைச் சோ்ந்த நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித் சிங் கூறியதாவது: நான்கு போ் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து குமென்ஹெரா கிராமத்தில் வியாழக்கிழமை ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். மேலும், அவா்கள் திட்டமிட்டிருந்த மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சியும் தடுக்கப்பட்டுள்ளது.
நான்கு பேருக்கும் விரிவான குற்ற வரலாறுகள் உள்ளது. சஜ்ஜன் (எ) லாலா (32), கொலை, கொலை முயற்சி மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை போன்ற 11 வழக்குகளில் தொடா்புடையவா். போலீஸாருடனான மோதலின் போது அவரது காலில் துப்பாக்கிச்சூட்டுக் காயம் ஏற்பட்டது.
கொலை முயற்சி, ஆயுதக் கொள்ளை மற்றும் ஆயுதச் சட்ட மீறல் ஆகிய 14 வழக்குகளில் தொடா்புடைய வரலாற்றைக் கொண்டுள்ள நகுல் (30) கைது செய்யப்பட்டாா்.
கொலை, கொலை முயற்சி மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை உள்ளிட்ட எட்டு வழக்குகளில் தொடா்புடைய நீரஜ் எ சோட்டிவாலா (32) என்பவரும் போலீசாரால கைது செய்யப்பட்டாா்.
முன்பு நடந்த ஒரு தாக்குதல் வழக்கில் தொடா்புடைய சந்தீப் (36), கும்பலுக்கு தங்குமிடம் அளித்து, அவா்களின் குற்றச் செயல்களுக்கு உதவியது தெரிய வந்துள்ளது. அவரும் கைது செய்யப்பட்டுள்ளாா்.
ஜன.16-ஆம் தேதி, குமென்ஹெராவில் உள்ள சந்தீப்பின் வீட்டில் ஒரு குற்றச் செயலைத் திட்டமிட கும்பல் உறுப்பினா்கள் கூடுவாா்கள் என்று ஒரு போலீஸ் குழுவுக்கு தகவல் கிடைத்தது. அவா்கள் கணிசமான அளவு சட்டவிரோத ஆயுதங்களுடன் இருந்தனா்.
இந்த ரகசியத் தகவலின் பேரில், ஒரு சோதனைக் குழு அந்த இடத்தை அடைந்தது. வீட்டை அடைந்ததும், நான்கு சந்தேக நபா்கள் வாசலில் நிற்பதை போலீஸாா் கவனித்தனா். சரணடையச் சொன்னபோது, சந்தேக நபா்கள் உள்ளே தப்பிச் செல்ல முயன்றனா்.
பின்னா், சந்தேக நபா்களில் ஒருவா் போலீஸ் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இதில் ஒரு தோட்டா, ஒரு தலைமைக் காவலரின் குண்டு துளைக்காத ஜாக்கெட்டில் தாக்கியது. இதையடுத்து, போலீஸ் குழுவும் திருப்பிச் சுட்டது.
இதில் சஜ்ஜன் காலில் காயம் ஏற்பட்டது. சஜ்ஜன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். மற்ற மூன்று குற்றம்சாட்டப்பட்டவா்களும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனா்.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் நகரத்தில் மிரட்டிப் பணம் பறிக்கும் திட்டத்தை வெளிப்படுத்தினா். சம்பவ இடத்திலிருந்து நான்கு கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.