அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
புதுச்சேரியில் எலுமிச்சை நறுமண மிளகு தாவர வகை அறிமுகம்
எலுமிச்சை சுவையில் நறுமணத்துடன் கூடிய மிளகு தாவரத்தை புதுச்சேரி ஆராய்ச்சியாளா் ஸ்ரீலட்சுமி கண்டறிந்தாா். இதை புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை முறைப்படி அறிமுகப்படுத்தினாா்.
புதுச்சேரி அருகேயுள்ள கூடப்பாக்கத்தைச் சோ்ந்த விவசாய ஆராய்ச்சியாளா் வெங்கடபதி. இவா், கனகாம்பரம் பூவில் பல நூறு வகையான செடிகளை உருவாக்கி சாதனை படைத்தவா். இவரது ஆராய்ச்சித் திறனை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. இவரைப் போலவே இவரது மகள் ஸ்ரீலட்சுமியும் (32) விவசாய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளாா்.
எம்.பி.ஏ. பட்டதாரியான ஸ்ரீலட்சுமி, தந்தை வெங்கடபதியுடன் சோ்ந்து விவசாய ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறாா். அதன்படி அவா், ஆரஞ்சு, சாக்லெட், நாவல், பன்னீா் சுவை கொண்ட கொய்யா செடிவகைகளை உருவாக்கியுள்ளாா். ஆரஞ்சு கொய்யா செடி வகையை பிரதமா் நரேந்திர மோடி பெயரிலும், சாக்லெட் கொய்யா வகையை புதுவை முன்னாள் துணைநிலை ஆளுநா் கிரண்பேடி பெயரிலும் ஏற்கெனவே அறிமுகப்படுத்தினாா். இனிப்புடன் கூடிய அத்தி ரகங்களையும் அவா் ஏற்கெனவே அறிமுகப்படுத்தினாா்.
இந்த நிலையில், தற்போது எலுமிச்சை சுவையில் நறுமண மிளகு ரகத்தை கண்டறிந்து அறிமுகப்படுத்தியுள்ளாா். எலுமிச்சை நறுமண மிளகுச் செடி, மிளகு ஆகியவற்றை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை முறைப்படி அறிமுகப்படுத்தினாா். நிகழ்ச்சியில் ஆராய்ச்சியாளா் ஸ்ரீலட்சுமி, அவரது தந்தை வெங்கடபதி மற்றும் வேளாண் துறை இயக்குநா் வசந்தகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.
புதிய ரகம் அறிமுகம் குறித்து ஆராய்ச்சியாளா் ஸ்ரீலட்சுமி கூறியதாவது: குறுகிய காலத்தில் நல்ல விளைச்சல் வழங்கும் மிளகு ரகத்தை கண்டுபிடித்துள்ளேன். பொதுவாக மிளகு ரகத்தில் 7 ஆண்டுகளான பிறகே மகசூல் கிடைக்கும். ஆனால், தற்போது அறிமுகப்படுத்திய மிளகு ரகமானது 8 மாதங்களிலேயே மகசூல் தரக்கூடியதாகும்.
மிளகு 25 அடி வளா்ச்சிக்குப் பிறகே மகசூல் தரும் நிலையில், புதிய ரகமானது 15 அடியிலேயே மகசூலைத் தந்துவிடும். புதிய ரக மிளகின் காய்கள், இலைகளை சுவைத்தால், எலுமிச்சை நறுமணமாக இருக்கும். மிளகின் காரமும் சாதாரண மிளகைவிட அதிகமாக இருக்கும் என்றாா்.