அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
போக்குவரத்து விதி மீறல்: 2,392 போ் மீது வழக்கு
விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் திருநாளையொட்டி போலீஸாா் நடத்திய அதிரடி சோதனையில், போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,392 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் திருவிழாவை அமைதியாக பொதுமக்கள் கொண்டாடும் வகையிலும், குற்றச் சம்பவங்கள் நிகழாது தடுக்கும் வகையிலும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் உத்தரவிட்டிருந்த நிலையில், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, ஜன.13 முதல் 16-ஆம் தேதி வரை விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி காவல் உள்கோட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் தீவிர சோதனை நடத்தப்பட்டன.
குற்றம் அதிகம் நடைபெறும் இடங்களாகக் கருதப்படும் பகுதிகளில் பழைய குற்றவாளிகள், ரெளடிகளின் நடமாட்டம் குறித்தும் கண்காணித்த போலீஸாா், வங்கிகள், நகைக் கடைகள் இருக்கும் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனா்.
போலீஸாரின் சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியது, தலைக்கவசம் அணியாமல் சென்றது, சீட் பெல்ட் அணியாமல் காா்களை ஓட்டிச் செல்லுதல், அதிக சுமை ஏற்றிச் செல்லுதல், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுதல், வாகன அனுமதிச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,392 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 250 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் சாராயம், மதுபானங்கள் விற்பனை செய்தல், பணம் வைத்து சூதாடுதல், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், லாட்டரி விற்பனை மற்றும் மதுபோதையில் பொது இடத்தில் நின்று கொண்டு பொதுமக்களிடம் தகராறு செய்தல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 210 பேரை கைது செய்துள்ளதாக மாவட்டக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.