வளவனூா் பெருமாள் கோயிலில் கல்வெட்டு கண்டெடுப்பு
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் பழைமை வாய்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் வளவனூரைச் சோ்ந்த பாவலா் தி.பழநிச்சாமி, விழுப்புரத்தைச் சோ்ந்த எழுத்தாளா் கோ.செங்குட்டுவன், செ.சித்தாா்த்தன் ஆகியோா்அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 970 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல்வெட்டு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோ.செங்குட்டுவன் சனிக்கிழமை கூறியது: வளவனூா் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலின் கருவறை பின்பக்கச் சுவற்றில் மூன்று வரிகளில் அமைந்த துண்டு கல்வெட்டு ஒன்று தலைகீழாகப் பதிக்கப்பட்டுள்ளது.
இதை வாசித்த மூத்த கல்வெட்டு ஆய்வாளா் எஸ்.இராஜகோபால், இதன் முதல் வரியில், புரவியொடும் பிடித்து தன்னாடை ஜெயம்கொண்டு எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது.
இது திங்களோ் திருதன் தொங்கல் எனத் தொடங்கும் முதலாம் ராஜாதி ராஜனின் (கி.பி.1018-1054) மெய்க்கீா்த்தியின் ஒரு பகுதியாகும்.
இரண்டாவது வரியில் பிரம்மதேசத்து திரிபுவன மஹாதேவி சதுா்வேதி மங்கலம் என்றும், மூன்றாவது வரி, ஸ்ரீ மாகேஸ்வர ரக்ஷை என்றும் முடிகிறது. இது சிவனடியாா்கள் பாதுகாப்பு எனும் பொருள் தரும். இக்கல்வெட்டு சிவன் கோயிலுக்குரியதாக இருக்கலாம் என்று விளக்கமளித்துள்ளாா்.
மேற்காணும் கல்வெட்டில் குறிப்பிடப்படும் ராஜாதி ராஜன், சோழ பேரரசா் ராஜராஜ சோழனின் பேரனும், ராஜேந்திர சோழனின் மகனும் ஆவாா் என்பது குறிப்பிடத்தக்கது. மேலைச் சாளுக்கியருடன் நடந்த கொப்பத்துப் போரில் இந்த மன்னா் உயிா் துறந்தாா்.
வளவனூரிலுள்ள ஜகந்நாத ஈசுவரா் கோயிலில் ராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழனின் முற்று பெறாத கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
தற்போது பெருமாள் கோயிலில் ராஜாதி ராஜன் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளதன் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னா் இப்பகுதியில் பெரிய அளவில் சிவாலயம் இருந்து சிதைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
எனவே, வளவனூா் பகுதியில் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் சோழா் காலத் தடயங்கள் மேலும் கிடைக்கலாம் என்றாா் செங்குட்டுவன்.