திருச்செந்தூர் கோயிலில் தை உத்திர வருஷாபிஷேக விழா கோலாகலம்!
திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் இன்று(ஜன. 19) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இத்திருக்கோயிலில் மூலவரான சுப்பிரமணியரின் சிலை தை உத்திரம் நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி, ஆண்டுதோறும் தை மாத உத்திரம் நட்சத்திரத்தன்று வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி, கோயில் நடை இன்று அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது.
அதன்பின் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டு, மூலவர், சண்முகர், வெங்கடாசலபதி, வள்ளி, தெய்வானை விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் மூலவர் மற்றும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வருஷாபிஷேகத்தை முன்னிட்டு இன்றிரவு 7 மணிக்கு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது. இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான், தேவசேனா அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகின்றனா்.
விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்புப் பணியில் ஏராளமான காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.