காய்ச்சல், கடுங்குளிர், அட்டைக்கடி! சந்திச்சதே இல்ல இப்படியொரு ஷூட்டிங்!- `சின்ன மருமகள்' நவீன்
அடர்ந்த காடு, பீதி கிளப்பும் காட்டு விலங்குகளின் சத்தம், நடுங்க வைக்கும் குளிர்.. இவற்றின் ஊடே சுமார் பத்து நாள்கள் இருந்து ஷூட்டிங் முடித்து வந்திருக்கிறார் நடிகர் நவீன்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' சீரியலில் தற்போது ஒளிபரப்பாகி வரும் த்ரில்லர் காட்சிகளுக்காக இப்படி ஒரு ஷூட்டிங்கில் கலந்து கொண்டு திரும்பியவரிடம் பேசினோம்.
'சீரியலின் கதை ஒரு மலைப் பிரதேசக் காட்டுக்குள் டிராவல் பண்ண போகுதுன்னு தெரிஞ்சதுமே ஒரு த்ரில்லான எதிர்பார்ப்பு தொத்திக்கிடுச்சு. பொதுவா சீரியல் ஷூட்டிங்னா சென்னையை விட்டு வெளியில அவ்வளவா இருக்காது.
சம்மர் நேரங்கள்ல சில சீரியல்கள் கோடை வாசஸ்தலங்கள்ல நடக்கக் கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா நாங்க நல்ல குளிர்காலத்துல ஏற்காடுக்குக் கிளம்பிட்டோம்.
ஏப்ரல், மே மாசங்கள்லயே குளிர் அதிகமா இருக்கிற அங்க இப்ப கேக்கவா வேணும்? பனி பெய்ஞ்சிட்டிருந்த ஒரு விடிகாலையிலதான் போய் இறங்கினோம்.
உயரமான மரங்கள் அடர்த்தியா இருந்த காடு, அதுக்குள்ள இருந்து அப்பப்ப கேட்டுக்கிட்டே இருந்த வன விலங்குகளின் சத்தம், குளிர்ந்த காத்து, ஆர்ப்பரிக்கிர சத்தத்துடன் விழுந்த நீர்வீழ்ச்சினு ஷூட்டிங்குக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடமும் பார்த்தீங்கன்னா ஒருபக்க்கம் ரம்மியமா மனசுக்குப் பிடிச்சதா இருந்தாலும் இன்னொரு பக்கம் திகில், பீதினு த்ரில்லிங்கான அனுபவத்தையும் தந்திச்சு.
பாறையில வழுக்குகிற காட்சி, மரத்துல இருந்து விழுகிற மாதிரியான காட்சின்னு எனக்கான சீனும் ரொம்பவே திக் திக் அனுபவத்தைதான் தந்திச்சு.
அந்த அட்மாஸ்பியர்ல தங்கியிருந்த நாள்கள் என் வாழ்க்கையில மறக்கவே முடியாது. இதுவரை என் நடிப்பு கரியர்ல இந்த மாதிரி அனுபவத்தை நான் சந்திச்சதில்லை. அதுவும் தொடர்ந்து அப்படியொரு கிளைமேட்ல இருந்ததால் காய்ச்சல் வந்திடுச்சு. அதோட அட்டைப்பூச்சிகளின் கடி. ஆனாலும் போயிருந்தவங்கள்ல ஒருத்தருக்கு கூட எந்தவொரு பாதிப்பும் வராதபடி பார்த்துக்கிடுச்சு யூனிட்.
மறக்க முடியாத அனுபவமா அமைஞ்ச அதேநேரம் உடலுக்கு சுத்தமான மூலிகைகள் கலந்து காத்து, மனசுக்கு உற்சாகம், தைரியம்னு அடுத்தவொரு ஆறு மாசத்துக்கு தாங்கும் இந்த அனுபவம்'' என்கிறார்.