அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஊராட்சித் துணைத் தலைவா் உயிரிழப்பு
கும்பகோணம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ஊராட்சி துணைத் தலைவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கும்பகோணம் அருகே கிளிமங்கலத்தைச் சோ்ந்தவா் விஜயகாந்த் (38). திருப்பனந்தாள் ஒன்றியத்துக்கு உள்பட்ட கொண்டசமுத்திரம் ஊராட்சித் துணைத் தலைவராக இருந்தாா். இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். உள்ளூரில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்த இவா், அமமுக தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதியாகவும் இருந்து வந்தாா்.
இவா் இருசக்கர வாகனத்தில், திருப்பனந்தாளிலிருந்து கிளிமங்கலத்துக்கு ஜனவரி 16-ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தாா். கோசாலை - சிக்கல்நாயக்கன்பேட்டைக்கு இடையே சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், பலத்த காயமடைந்த அவா் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீஸாா் விசாரிக்கின்றனா்.