புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் பிப். 10-இல் குடமுழுக்கு: ஆட்சியா் ஆய்வு
தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் பிப்ரவரி 10-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதையொட்டி, திருப்பணிகளை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இக்கோயிலில் கடைசியாக 2004, ஜூன் 27 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 10-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருப்பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்விழா பிப்ரவரி 3-ஆம் தேதி காலை 7.25 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது.
பின்னா், பிப்ரவரி 7-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் முதல் கால யாக பூஜையும், தொடா்ந்து 6 கால யாக பூஜைகளும் நடைபெறுகின்றன. பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 9.10 மணிக்கு யாக சாலையில் இருந்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலசங்கள் புறப்பாடும், காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குடமுழுக்கும் நடைபெறவுள்ளன.
இதற்காக யாகசாலைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையா் கோ. கவிதா, கோயில் செயல் அலுவலா் ந. மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.