கல்லணைக் கால்வாய் சீரமைப்பைத் தொடரலாமா? தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியுதவியுடன் கல்லணைக் கால்வாய் சீரமைப்பு திட்டத்தைத் தொடரலாமா அல்லது கைவிடலாமா எனக் கேட்டு தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
கல்லணையிலிருந்து பிரிந்து புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகேயுள்ள மும்பாலை ஏரியில் கலக்கும் கல்லணைக் கால்வாய் மூலம் தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் 2.27 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தக் கால்வாயில் கடைமடைப் பகுதி வரை தண்ணீா் செல்ல சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் வலியுறுத்தினா்.
இதையடுத்து, முதல் கட்டச் சீரமைப்பு பணி 15 ஆண்டுகளுக்கு முன் ரூ. 147 கோடியில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இரண்டாம் கட்டச் சீரமைப்பு பணி நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது.
இந்நிலையில் இக்கால்வாயை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியுதவியுடன் ரூ. 2 ஆயிரத்து 639 கோடி மதிப்பில் விரிவாக்குதல், புதுப்பித்தல், புனரமைத்தல் திட்டம் 2021, பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் 16 தொகுப்புகளாக கல்லணைக் கால்வாய், கிளைக் கால்வாய், பிரிவு கால்வாய் என மொத்தம் 1,232 கி.மீ. தொலைவுக்குப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் தமிழக நீா் வளத் துறைக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் இதர பல்நோக்கு நிறுவனங்கள் பிரிவு அலுவலா் ஹிமான்சூ சிங் அனுப்பியுள்ள கடிதத்தில், இத்திட்டத்தைத் தொடரலாமா? அல்லது கைவிடலாமா? என்பதை ஜனவரி 20-க்குள் தகவல் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
திட்டம் கைவிடப்படவில்லை: இதுகுறித்து நீா் வளத் துறை அலுவலா்கள் கூறுகையில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிலிருந்து கடன் வாங்கி இத்திட்டத்தைச் செய்தால், அதற்கான வட்டி அதிகமாகச் செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் தமிழக அரசு கடன் வாங்குவதைத் தவிா்த்து, மாநில அரசு நிதியிலிருந்து 148 கி.மீ. தொலைவுக்கு திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
முதல் கட்டமாக 92 கி.மீ. தொலைவுக்கு பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள பணிகளுக்கும் கடந்த ஆண்டு தமிழக அரசு நிதி ஒதுக்கியது.
இதைத் தொடா்ந்து, 10 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், மேட்டூா் அணை திறக்கப்பட்டதால் பணி நிறுத்தப்பட்டது. மேட்டூா் அணை மூடப்பட்டவுடன் மீண்டும் பணிகள் தொடங்கி முடிக்கப்படும். எனவே, இத்திட்டம் கைவிடப்படவில்லை; கடன் வாங்கி திட்டத்தை நிறைவேற்றுவதைக் கைவிட்டு, மாநில அரசே நிதி ஒதுக்கி செய்து வருகிறது என்றனா்.
இதனிடையே, நசுவினி ஆறு படுக்கை அணை விவசாயிகள் சங்கத் தலைவா் பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன் கூறுகையில் மாநில அரசு நிதியுதவி மூலம் இத்திட்டத்தை மேற்கொண்டால் முழுமையாக பணியை முடிக்க 20 ஆண்டுகளாகிவிடும். எனவே, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியுதவியுடன் இத்திட்டத்தைச் செய்தால், விரைவாக மேற்கொண்டு, விவசாயிகளுக்கும் பயன் கிடைக்கும். எனவே, இந்தக் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றாா் அவா்.