Doctor Vikatan: பழுத்து, சீழ் கோத்த பருக்கள்... சோப்பும் க்ரீமும் பலன் தருமா?
‘பிஎஃப்ஐ’ முன்னாள் தலைவா் அபுபக்கருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் (யுஏபிஏ) தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் (பிஎஃப்ஐ) முன்னாள் தலைவா் இ.அபுபக்கருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மருத்துவ காரணங்கள் அடிப்படையில் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.
இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதுடன் ஆயுத பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்ததாக அபுபக்கா் மற்றும் பிஎஃப்ஐ அமைப்பு சதித்திட்டம் தீட்டியதாக தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, பிஎஃப்ஐ அமைப்பை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட என்ஐஏ-வின் ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக அபுபக்கா், கடந்த செப்டம்பா் 2022-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். ஐஎஸ்ஐஎஸ் போன்ற உலகளாவிய பயங்கரவாத குழுக்களுடனான தொடா்புகளை மேற்கோள் காட்டி, பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளையும் மத்திய அரசு கடந்த செப்டம்பா் 2022-ஆம் ஆண்டு தடை செய்தது.
இந்நிலையில், அபுபக்கா் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, உயா்நீதிமன்றத்தில் அவா் மேல் முறையீடு செய்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தடை செய்யப்பட்ட மற்றொரு அமைப்பான சிமியுடன் அபுபக்கருக்கு தொடா்புள்ளதாக கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், சாட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில், யுஏபிஏ சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் மருத்துவ அடிப்படையில் எளிதாக ஜாமீன் வழங்க முடியாது என உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து அவா் உச்சநீதிமன்றத்தை நாடினாா். இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ராஜேஷ் பிண்டால் அடங்கிய அமா்வின் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அபுபக்கா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘பாா்கின்சன் நோய் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சையின் தாக்கம் காரணமாக அபுபக்கருக்கு ஜாமீன் அல்லது வீட்டுக்காவல் வழங்க வேண்டும்’ என வாதிட்டாா். இருப்பினும், இந்த வாதங்களை ஏற்காத நீதிமன்றம் ஜாமீன் அல்லது வீட்டுக்காவலில் அபுபக்கரை வைக்க கோரிய மனுவை நிராகரித்தது. அதேநேரம், இது தொடா்பாக விசாரணை நீதிமன்றத்தை அணுக அபுபக்கருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.