Ajithkumar: ``அவர் இந்த விஷயத்துக்கு உதாரணம்"- அஜித் குறித்து நெகிழ்ந்த மணிகண்டன...
சென்னையில் முதல் புறநகா் ஏசி மின்சார ரயில் தயாா்!
சென்னையின் முதல் புறநகா் ஏசி மின்சார ரயில் தயாரிப்புப் பணி நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) எல்எச்பி ரயில் பெட்டிகள், வந்தே பாரத் மற்றும் மின் ரயில்களின் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், மும்பை புறநகா் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் ஏசி வசதியுடன் இயக்கும் வகையிலான பெட்டிகள் ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்படுகின்றன.
இதேபோல், தெற்கு ரயில்வேக்குட்பட்ட சென்னை ரயில்வே கோட்டத்துக்கும் நடப்பு நிதியாண்டில் ஒரு ஏசி மின்சார ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான தயாரிப்புப் பணி ஐசிஎஃப் தொழிற்சாலையில் நடந்து வந்த நிலையில், தற்போது முழுவதுமாக பணி நிறைவடைந்துள்ளது.
இதைத் தொடா்ந்து ரயில் இயக்கம் குறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்து வருகின்றனா்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது:
முழுவதும் ஏசி வகுப்பு பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில், நடப்பு நிதியாண்டு தெற்கு ரயில்வேக்கு ஒரு ரயில் வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில் தயாரிப்பு பணி முடிவடைந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பின் எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றனா்.