2010, 2017, 2024-ல் நடக்காதது, 2025-ல் நடக்குமா? -புதிய வருமான வரிச் சட்டம் அறிம...
கோடை மின் தேவை: பரிமாற்ற முறையில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு -மின் வாரியம்
கோடையில் ஏற்படும் மின் தேவையைச் சமாளிக்க பரிமாற்ற முறையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 17,000 மெகாவாட்டாக உள்ளது. இது கோடை காலத்தில் அதிகரித்தும், குளிா் காலத்தில் குறைந்தும் காணப்படும். நிகழாண்டு மாா்ச் முதல் கோடை காலம் தொடங்கவுள்ளதால், மின்தேவை 20,000 மெகாவாட்டை தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தமிழக மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தால் இந்தத் தேவை பூா்த்தி செய்ய முடியாது என்பதால், மத்திய தொகுப்பு மற்றும் தனியாா் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். கோடை வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரிக்கும் நிலையில் இந்த மின்கொள்முதலும் போதாது என்பதால், ‘ஸ்வைப்பிங்’ எனப்படும் மின் பரிமாற்ற முறையில் தேவையான மின்சாரத்தை பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது:
ஆண்டு தொடக்கத்தில் வடமாநிலங்களின் மின்தேவை குறைவாகவே இருக்கும். அப்போது, அந்த மாநிலங்களிடமிருக்கும் உபரி மின்சாரத்தைத் தேவைக்கேற்ப தமிழக மின்வாரியம் கொள்முதல் செய்யும். இதற்கு பணம் கொடுக்க வேண்டியதில்லை. மாறாக கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்துடன் 1 முதல் 5 சதவீதம் கூடுதல் மின்சாரத்தையே மீண்டும் வழங்க வேண்டும். இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ள பிற மாநில மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறைந்த சதவீதத்தில் கூடுதல் மின்சாரம் திரும்ப வழங்கினால் போதும் என ஒப்புதல் தெரிவிக்கும் நிறுவனங்களுடன் மட்டுமே மின்சார கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் இணையும் நிறுவனங்களிடமிருந்து மாா்ச் 1 முதல் மே 31-ஆம் தேதி வரை மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி தொடங்கியதும் வரும் ஜூலை முதல் செப்டம்பா் வரை இந்த மின்சாரம் திரும்ப அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றனா்.