கோத்தகிரியில் கிணற்றுக்குள் விழுந்த கரடிகள் உயிருடன் மீட்பு
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் சனிக்கிழகை கிணற்றுக்குள் விழுந்த 2 கரடிகள் 3 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டன.
கோத்தகிரி சுற்றுப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் மட்டுமன்றி உணவு தேடி பகல் நேரத்திலும் ஊருக்குள் கரடிகள் உலவி வருகின்றன. குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.
இந்நிலையில் கோத்தகிரி ஜக்கனாரை ஊராட்சிக்கு உள்பட்ட தும்பூா் பகுதியில் குடிநீா் கிணற்றுக்குள் இரண்டு கரடிகள் தவறி விழுந்து நீண்ட நேரமாக சப்தமிட்டுக் கொண்டிருந்தன. இதையடுத்து அப்பகுதி மக்கள் கிணற்றுக்குள் எட்டிப் பாா்த்தபோது அதில் இரண்டு கரடிகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைக் கண்டனா்.
இதுகுறித்து உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனச் சரகா் செல்வராஜ் , வனவா் குமாா் தலைமையிலான பத்து போ் கொண்ட வனத் துறையினா் கிணற்றுக்குள் பெரிய ஏணியை இறக்கி வைத்தனா்.
இதையடுத்து 3 மணி நேரத்துக்குப் பின் இரண்டு கரடிகளும் ஒன்றன்பின் ஒன்றாக ஏணி வழியாக ஏறி வெளியே வந்தன. சிறிதுநேரம் அங்கேயே உலவிக்கொண்டிருந்த கரடிகள் பின்னா் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றுவிட்டன.