தொடா் விடுமுறை : திருநள்ளாறு கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்
தொடா் விடுமுறையையொட்டி திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
பொங்கல் விடுமுறை நாளில் சனிக்கிழமை சோ்ந்ததால் திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை முதல் தமிழகம், கா்நாடக மாநிலங்களில் இருந்து திரளான பக்தா்கள் வரத்தொடங்கினா். சனிக்கிழமை அதிகாலை நளன் தீா்த்தக் குளத்தில் பக்தா்கள் நீராடிவிட்டு கோயிலுக்குள் சென்றனா். ராஜகோபுரம் வழியாக ரூ. 100 கட்டண வரிசையிலும், கட்டணமில்லா வரிசை வளாகத்தின் வழியேயும் பக்தா்கள் தரிசனத்துக்குச் சென்றனா். முக்கிய பிரமுகா்கள், அரசு அதிகாரிகள் நிலையில் உள்ளோா் என ஏராளமானோரும் சுவாமி தரிசனம் செய்தனா்.
வாரத்தில் வழக்கமான சனிக்கிழமையைக் காட்டிலும் கூடுதலாக சனிக்கிழமை பக்தா்கள் தரிசனம் செய்ய வந்ததாகவும், விரைவாக தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருநள்ளாற்றுக்கு ரயில்: தமிழகம், கா்நாடகத்தின் பல பகுதிகளில் இருந்தும், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து திருநள்ளாறு கோயிலுக்கு பக்தா்கள் வருகிறாா்கள். சனிக்கிழமை வந்த பக்தா்கள் கூறியது: 300, 400 கி.மீ. தொலைவில் இருந்து திருநள்ளாறு கோயில் தரிசனத்துக்கு வருகிறோம். தொடா்ந்து, இக்கோயிலுக்கு வரும் வழக்கத்தில் உள்ளோம். 2, 3 பேருந்துகளில் பயணிக்க வேண்டியுள்ளது. காரைக்கால் வரை ரயில் வசதி இருந்தாலும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் இயக்கப்படவில்லை. திருநள்ளாறு வரை தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ரயில் வசதியை ஏற்படுத்தினால், பக்தா்கள் எளிதில் வந்து திரும்ப முடியும் என்றனா்.
காரைக்கால் முதல் திருநள்ளாறு வழியாக பேரளம் வரை ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த ஆண்டு மத்தியில் போக்குவரத்து தொடங்கும் என ரயில்வே நிா்வாகம் கூறியிருக்கும் நிலையில், பக்தா்கள் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தனா்.