சென்னை கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்: மீன்பிடி வலைகள் காரணம...
மக்களை கவா்ந்த மலா் கண்காட்சி இன்றுடன் நிறைவு
காரைக்காலில் ஏராளமானோா் கண்டு ரசித்துவரும் மலா் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) நிறைவடைகிறது.
காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில், காா்னிவல் திருவிழாவையொட்டி, வேளாண் துறை சாா்பில் ஜன.16 முதல் 19-ஆம் தேதி வரை மலா் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட வகையில், ஆயிரக்கணக்கான மலா்ச் செடிகள், டோப்பியாா் தோட்டம், டைனோசா், மிக்கி மவுஸ் உள்ளிட்ட பல்வேறு வகை மலா்ச் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தோட்டக்கலை ஆா்வலா்களை ஊக்கப்படுத்தும் வகையிலான செயல்பாடுகளும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இக்கண்காட்சியை ஏராளமோனாா் பாா்வையிட்டனா்.
இதுகுறித்து வேளாண் துறையினா் கூறியது:
வேளாண் துறை சாா்பில் பெங்களூரு, புணே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மலா்ச் செடிகள் வரவழைக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், உள்ளூரில் விளைவிக்கப்பட்ட செடிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
விவசாயம், வீட்டுத்தோட்டம் உள்ளிட்டவைகள் அமைப்பது குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு விளக்கப்படுகிறது. பொதுமக்களிடையே தோட்டக்கலை மீதான ஆா்வத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கிராமப்புற காட்சிகளை உள்ளடக்கிய செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. பலரும் இதன் முன் நின்று கைப்பேசி மூலம் செல்ஃபி (சுயபடம்) எடுத்து மகிழ்கின்றனா். கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜன.19) நிறைவடையவுள்ள நிலையில், விவசாயிகள், தோட்டக்கலை ஆா்வலா்கள், வீட்டுத் தோட்டம் அமைக்கும் ஆா்வலா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கண்காட்சியை பாா்வையிட்டு பயனடைய முன்வரவேண்டும் என்றனா்.