2வது காலாண்டில் ரூ.3.6 கோடி நஷ்டத்தை பதிவு செய்த மொபிகுவிக்!
திருச்சி: `7 வயது சிறுவன் டு 80 வயது பாட்டி..!’ - களைகட்டிய அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்
மலைக்கோட்டை மாநகரமான திருச்சியில் அவள் விகடன் சார்பில் நடத்தப்படும் `சமையல் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சி விமர்சையாக தொடங்கி நடைப்பெற்று முடிந்திருக்கிறது. ராகி புட்டு, சிகப்பு அரிசி பாயசம், பொரிமாவு ஸ்வீட், முருங்கைகீரை சாதம், பனைஓலை கொழுக்கட்டை, கூடாரவல்லி என்று போட்டியில் கலந்துகொண்டவர்கள் முதல் சுற்றில் விதவிதமாக காட்சிப்படுத்தி, அசத்தினர். திருச்சி பால்பண்ணையில் இருந்து செல்லும் மார்க்கெட் சாலையில் அமைந்துள்ள பத்மாவதி ஹோட்டல் காம்ப்ளக்ஸில்தான் அவள் விகடன் சார்பில் நடத்தப்படும் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி குதூகலமாக நடந்தது.
பெண்களுக்கு போட்டியாக ஆண்களும் இந்த சமையல் போட்டி கோதாவில் குதித்தனர். அதோட்டு, நான்கு குட்டீஸ்களும் தங்கள் நளபாகத்தை கடைப்பரப்பியது, அங்கிருந்தோரை அசர வைத்தது. மொத்தத்தில் 7 வயது சிறுவன் முதல் 80 வயது பாட்டி வரை இந்த சமையல் போட்டியில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். முன்னதாக, இந்த நிகழ்வை செஃப் தீனா, திருச்சி லலிதா ஜூவல்லரி கிளை மேலாளர் நாராயணசாமி, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மூன்று பெண் போட்டியாளர்கள் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, போட்டியாளர்கள் முன் பேசிய செஃப் தீனா,
“உங்கள் சமையல் திறமை உங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி போய்விடக்கூடாது. அதனை, வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தவே இந்த போட்டி. நேற்று தஞ்சையில் நடைப்பெற்ற போட்டியில், ’மதுரை ஜிகர்தண்டா போல், தஞ்சை ஜிகர்தண்டா என்று ஒன்றை ஒரு போட்டியாளர் செய்து அசத்தியிருந்தார். நீங்கள் செய்து கொண்டுவந்துள்ள உணவை முதலில் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் அழகாக டிஸ்ப்ளே செய்யுங்கள்.
அதன்பிறகு, அதன் மணம் நாசியை கவர்ந்து, கடைசியாக நாவுக்கு சுவைகூட்டும் விதமாக உங்கள் உணவுகள் இருக்க வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று கூறி, உற்சாகப்படுத்தினார்.
இந்த போட்டியில், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, ஈரோடு, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், காரைக்குடி, காரைக்கால் என்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியாளர்கள் தாங்கள் சமைத்துக் கொண்டுவந்திருந்த உணவை காட்சிப்படுத்தினர். எல்லா போட்டியாளர்களும் பார்வைக்கு வைத்திருந்த உணவுகளை செஃப் தீனா சுவைத்துப் பார்த்து, அவற்றில் சிறந்த உணவை செய்த பத்து பேரை தேர்ந்தெடுத்தார். அவர்கள் பத்து பேர்களில் இருந்து சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கலந்துகொள்பவர்களை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு தனியாக போட்டி வைக்கப்பட்டது.
அவர்களில் சிறப்பாக உணவை தயார் செய்த சரவணன், கவுசல்யா, கவிதா ஆகிய மூன்று பேர்கள் ஃபைனலில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் மூன்று பேர்களுக்கு மட்டுமின்றி, இரண்டாம் சுற்றில் கலந்துகொண்ட பத்து பேர்களுக்கும் ஸ்பான்சர்கள் வழங்கிய கிஃப்ட்டுகள் வழங்கப்பட்டன. உற்சாகத்துடன் நிறைவுப்பெற்றது அவள் விகடன் நடத்திய இந்த சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி.