தென்னாப்பிரிக்க லீக் தொடரில் இந்திய வீரர்களை பார்க்க விரும்பும் ஏபி டி வில்லியர்ஸ்!
தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் இந்திய வீரர்கள் விளையாடுவதற்கு எதிர்காலத்தில் பிசிசிஐ அனுமதிக்கும் என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த ஆண்டு சர்வதேசப் போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகளிலிருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அவரது அந்த முடிவுக்குப் பிறகே, தினேஷ் கார்த்திக் தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் விளையாடுவது சாத்தியமானது. தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் விளையாடவுள்ள முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் அவரையேச் சேரும்.
இதையும் படிக்க: ரோஹித் சர்மா, விராட் கோலியை குறிவைப்பது நியாயமல்ல; யுவராஜ் சிங் ஆதரவு!
இந்திய அணிக்காக தற்போது விளையாடி வரும் வீரர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் எந்தவொரு டி20 லீக் தொடர்களிலும் விளையாடுவதற்கு பிசிசிஐ அனுமதிப்பதில்லை. இந்திய வீரர் ஒருவர் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் விளையாட வேண்டுமென்றால், அவர் இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
இந்திய வீரர்கள் வேண்டும்
தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் விளையாடவுள்ள நிலையில், அந்த தொடரில் அதிக அளவிலான இந்திய வீரர்கள் விளையாடுவதை பார்க்க விரும்புவதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் இந்திய வீரர்கள் அதிகம் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன். இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் விளையாடவுள்ளது மிகவும் சிறப்பான விஷயம். எதிர்காலத்தில் மேலும் பல இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் விளையாடுவதற்கு பிசிசிஐ அனுமதிக்கும் என நம்புகிறேன் என்றார்.
இதையும் படிக்க: ஆஸி.யை வீழ்த்தும் வழி எங்களுக்குத் தெரியும்: ககிசோ ரபாடா
தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரின் மூன்றாவது சீசன் நாளை மறுநாள் (ஜனவரி 9) தொடங்கி பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.