யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்!
காணாமல்போனவர் கொலையானதாக 4 பேருக்குச் சிறை; 17 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் திரும்பிய நபர்!
பீகார் மாநிலம், தியோரியா என்ற இடத்தைச் சேர்ந்தவர் நாதுனிபால் (50). இவர் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு... அதாவது 2009-ம் ஆண்டு திடீரென காணாமல் போய்விட்டார். இதையடுத்து நாதுனி பாலை கொலை செய்து நிலத்தை அபகரித்துக்கொண்டதாக நாதுனிபால் உறவினர்கள் 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. போலீஸார் 5 பேரையும் கைதுசெய்தனர். இதில் ஒருவர் இளம் வயது என்பதால் அவரை மட்டும் போலீஸார் விடுவித்தனர். நான்கு பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் நான்கு பேர் மீதும் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். மற்றவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் ஜான்சி என்ற இடத்தில் தெருவில் ஆதரவற்று சுற்றிக்கொண்டிருந்த ஒருவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் அவரது ஊர் மற்றும் பெயர் குறித்து விசாரித்தபோது, அது காணாமல் போன நாதுனிபால் என்று தெரிய வந்தது.
இதையடுத்து அவரை சொந்த ஊருக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். அவரை கண்டவுடன் கிராம மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். அதோடு அவர் கொலை செய்யப்பட்டதாக கருதி தண்டனை அனுபவித்து வந்தவர்கள் நிம்மதி அடைந்தனர். இது குறித்து... செய்யாத கொலைக்காக தண்டனை அனுபவித்த சதேந்திர பால் கூறுகையில், ``நானும் எனது சகோதரர்கள், தந்தை ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக 8 மாதங்கள் சிறையில் இருந்தோம். இப்போதுதான் நாங்கள் நிம்மதி அடைந்திருக்கிறோம். எங்கள் மீதான கொலை வழக்கு இன்னும் கோர்ட்டில் இருந்துகொண்டுதான் இருக்கிறது'' என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.