Ashwin : 'இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்' - மாணவர்கள் மத்தியில் அஷ்வின் ...
மகாராஷ்டிரா: கையோடு வரும் தலை முடி; ஒரே வாரத்தில் வழுக்கை; அச்சத்தில் கிராம மக்கள்; அரசு சொல்வதென்ன?
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் புதிய மர்ம நோய் ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. மர்மமான முறையில் மொத்தமாகத் தலையிலிருந்து முடி உதிர்ந்து வருகிறது.
இம்மாவட்டத்தில் உள்ள போர்காவ், கல்வாட், ஹிங்னா ஆகிய கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக ஆண்கள் மற்றும் பெண்களின் தலையிலிருந்து மர்மமான முறையில் முடி உதிர்ந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளும் முன்பாக 50 பேர் தலை மொத்தமாக வழுக்கையாகிவிட்டது.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இளையவர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரின் தலையிலிருந்தும் முடி உதிர்ந்து வருகிறது. இதனால் மக்கள் அவசர அவசரமாக மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். முடி விழ ஆரம்பித்து விட்டால் ஒரு வாரத்தில் அனைத்து முடியும் உதிர்ந்துவிடுவதாக இக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மூன்று கிராமத்திற்கும் சென்று அங்கு விநியோகம் செய்யப்படும் தண்ணீரைச் சோதனைக்காக எடுத்துச்சென்றுள்ளனர். இது தவிர முடி மற்றும் தோல் மாதிரிகளும் சோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. உரம் காரணமாகத் தண்ணீர் மாசுபட்டு இது போன்ற பிரச்னை வந்திருக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோதனை முடிவுகள் வந்தால்தான் முடி உதிர்வுக்கான காரணம் குறித்துத் தெரியவரும் என்று அவர்கள் தெரிவித்தனர். பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாகத் தண்ணீரைச் சுட வைத்துப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். மூன்று கிராம மக்களும் யாருக்கு எப்போது முடி உதிருமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து பஞ்சாயத்துத் தலைவர் ரமா பாட்டீல் கூறுகையில், "கடந்த 10 நாட்களாக எங்களது கிராமத்தில் ஒரு வித மர்ம நோய் பரவி இருக்கிறது. அதிகமானோர் தங்களது முடியை இழந்துள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது. எங்களது கிராமத்தில் மட்டும் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலையில் முடியைத் தொட்டால் அப்படியே கையோடு வந்துவிடுகிறது. இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
பாதிக்கப்பட்ட கிராமங்களைப் பார்வையிட்ட மருத்துவர் தீபாலி இது குறித்துக் கூறுகையில், "மாசுபட்ட தண்ணீர் காரணமாக இது போன்ற பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். நாங்கள் மாதிரியை எடுத்து சோதனைக்கு அனுப்பி இருக்கிறோம். அதன் முடிவுகள் வந்தால்தான் காரணம் தெரிய வரும்" என்று தெரிவித்தார்.