கவுன்டி போட்டிகளில் விளையாட விரும்பும் விராட் கோலி?
இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளான கவுன்டி போட்டிகளில் விராட் கோலி விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரின் போது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஏமாற்றமளிக்கும் வகையில் விளையாடினார். இதனால், அனைவரின் மத்தியிலும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகினார்.
முதல் டெஸ்டில் சதம் அடித்த போதிலும், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் 9 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து வெறும் 190 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை அடித்து அவுட் ஆகி நிறைய விமர்சனங்களையும் சந்தித்தார்.
விராட் கோலியின் எதிர்காலம் குறித்து நிறைய கருத்துகள் எழுந்துள்ள நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, சூழ்நிலைகளுக்குத் தயாராகும் வகையில் கோலி கவுன்டி போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், ஐபிஎல் போட்டிகள் இங்கு நடைபெறும் போது அங்கு கவுன்டி போட்டிகள் நடைபெறுவதால் அவர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விராட் கோலி ஃபார்ம் குறித்து தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறுகையில், “சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது கோலிக்கு ஒரு மோசமானதாக அமைந்தது.
பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் சதமடித்த போதிலும், ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 23.75 சராசரியுடன் 190 ரன்கள் மட்டுமே குவித்தார். விராட் கோலிக்கு ஓய்வு என்பது மிகவும் தனிப்பட்ட தேர்வு” என்றார்.
விராட் கோலி சில கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இந்த ஆண்டு ஐபிஎல் 2025 பிளேஆஃப்க்குச் செல்லவில்லை என்றால் மட்டுமே அது சாத்தியமாகும்.
ஆர்சிபி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறினால், கோலி கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு மிகக் குறைவான நேரமே இருக்கும். ஐபிஎல் இறுதிப் போட்டி மே 25 ஆம் தேதியும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஜூன் 20 ஆம் தேதியும் தொடங்குகிறது.
ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், கோலி கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு 14 நாள்கள் மட்டுமே இருந்து, இங்கிலாந்து சூழ்நிலையில் விளையாடப் பழகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஆர்சிபியின் கேப்டனாக கோலி நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.