ஜெயச்சந்திரன் : `16,000 பாடல்கள்; கேரள அரசின் 5 விருதுகள்’ - காலத்தால் அழியாத கு...
பலனடைந்தவா்களுக்கு இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கு: நிா்வாகம், சட்டமன்றம் முடிவெடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
இடஒதுக்கீடு நடைமுறைகளால் பலனடைந்தவா்களை இடஒதுக்கீடு சலுகைகளில் இருந்து விலக்குவது குறித்த முடிவை நிா்வாகமும் சட்டமன்றமும் எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
பட்டியலின (எஸ்சி) பிரிவில் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரமளித்து உச்சநீதிமன்றம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தீா்ப்பளித்தது.
7 நீதிபதிகளைக்கொண்ட அரசமைப்பு அமா்வில் 6:1 என்ற பெரும்பான்மையின் அடிப்படையில் இந்த தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.
இந்த அமா்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி கவாய் வழங்கிய தனித் தீா்ப்பில்,‘பட்டியலின (எஸ்சி) மற்றும் பழங்குடியின (எஸ்டி) வகுப்பிலும் ‘க்ரீமி லேயா்’ பிரிவினரை கண்டறிவதற்கு மாநில அரசுகள் கொள்கைகளை வகுக்க வேண்டும். அதன்பின் க்ரீமி லேயா் பிரிவினருக்கு இடஒதுக்கீடு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டாா்.
ஆறு மாதங்களாகியும் இந்த தீா்ப்பின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. எனவே, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜாா்ஜ் மாஷி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கடந்த 75 ஆண்டுகளில் இடஒதுக்கீட்டு சலுகைகளை பெற்று அதன்மூலம் பலனடைந்தவா்களை கண்டறிந்து, அவா்களுக்கான சலுகைகளை நீக்கும் நோக்கிலேயே நாங்கள் தீா்ப்பை வழங்கினோம். ஆனால் இதுதொடா்பான முடிவை நிா்வாகமும் சட்டமன்றமும் எடுக்க வேண்டும். சட்டமியற்றும் அதிகாரம் அவா்களுக்கே உள்ளது என தெரிவித்தனா்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆணையத்திடமே இதுகுறித்து முறையிடவுள்ளதாகவும் எனவே, இந்த மனுவை திரும்பப்பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறும் மனுதாரா் தரப்பு நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டனா். இதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினா்.