23 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது! யார் அந்த சார்?
தில்லியில் புதன்கிழமை 23 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தில்லியில் கடந்த சில தினங்களாகவே பல்வேறு பொது இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பள்ளிகளுக்கு அதிகளவில் வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் வாயிலாக வருகின்றன. சமீபத்தில் புதன்கிழமையில் (ஜன. 8) 23 பள்ளிகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் பெறப்பட்டன.
பள்ளி வளாகங்களில் பல்வேறு இடங்களில் பயங்கரமான வெடிகுண்டு இருப்பதாகவும், தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் அனைவரும் வகுப்பறைக்குள் இருப்பர்; மற்ற ஆசிரியர்களும் அதிகாரிகளும் பள்ளியைச் சுற்றி வருவர் என்பதாலும் இழப்பு அதிகமாக இருக்கும் என்று மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்மூலம், மின்னஞ்சல் அனுப்பியவருக்கு பள்ளிகளில் தேர்வு அட்டவணை குறித்தும், ஏனைய நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதற்கிடையே, பள்ளிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு, மின்னஞ்சலில் பெறப்பட்ட அச்சுறுத்தல் புரளி எனத் தெரிய வந்தது.
மேலும், மின்னஞ்சல் குறித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், பள்ளிகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல் அனுப்பியது 12 ஆம் வகுப்பு மாணவர் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர் கைது செய்யப்பட்டு, விசாரணையில் வைக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிக்க:சென்னை: சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள் கவனத்துக்கு...