இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் 9 நாள்கள் பொங்கல் விடுமுறை
கடலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், ஜனவரி 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் இவ்விரண்டு மாவட்ட மக்களுக்கும் பொங்கலுக்கு 9 நாள்கள் விடுமுறை கிடைத்திருக்கிறது.
ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர் மாவட்டத்துக்கு ஜன.13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. ஜன.13 ஆம் தேதி திங்கள்கிழமை மாா்கழி ஆருத்ரா தரிசனம் நடைபெறுவதால் அங்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வரும் ஜன. 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருஉத்திரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வரும் 2025 ஜன. 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.
இவ்விரு மாவட்டங்களிலும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பொங்கல் பண்டிகையையொட்டி ஜன. 17ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்த நிலையில், ஜனவரி 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருக்கும் கடலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு, ஜனவரி 11 முதல் ஜனவரி 19 வரை மொத்தமாக 9 நாள்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.