பொங்கல் ஸ்பெஷல்: மதுரை - சென்னை இடையே மெமு ரயில் சேவை - விவரம் இதோ!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்கெனவே சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ள தெற்கு ரயில்வே, தற்போது கூடுதலாக சென்னை - மதுரை இடையே முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு ரயில் சேவையை அறிவித்துள்ளது.
மெமு ரயில் என்பது (Mainline Electric Multiple Unit) கழிப்பறை வசதியுடன் கூடிய சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை போன்றதாகும்.
இந்த ரயில் சேவை வருகின்ற ஜனவரி 11 அன்று இயக்கப்பட உள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் - மதுரை முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06109) சென்னையிலிருந்து ஜனவரி 11 அன்று காலை 10.45 மணிக்கு புறப்பட்டு இரவு 07.15 மணிக்கு மதுரை வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் மதுரை - சென்னை முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06110) மதுரையிலிருந்து ஜனவரி 11 அன்று இரவு 08.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.40 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
இந்த ரயில்கள் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கு வழக்கமான இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பயண கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.