போதைப் பொருள் கடத்திய வங்கதேசத்து நபர் உள்பட 2 பேர் கைது!
புது தில்லியில் போதைப் பொருள் கடத்தியதாக, சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய வங்கதேசத்து நபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புது தில்லியின் போதைப் பொருள் தடுப்பு காவல் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சன்லைட் காலனி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஹமீதுல் (வயது 23) என்பவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது அவரிடம் இருந்து 768 கிராம் அளவிலான ஹெராயின் எனும் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
பின்னர், அதை அவருக்கு கொடுத்த அவரது உறவினரான நசீமா என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு சுமார் ரூ.8 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஹமீதுல் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறியதும் தெரியவந்தது.
இதையும் படிக்க:திருப்பதி நெரிசலில் சிக்கி காயமடைந்த பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம்!
மேலும், அவரது உறவுக்கார பெண்ணான நசீமா இதற்கு முன்னர் செய்தி தொலைக்காட்சியில் பணிப்புரிந்து வந்தார் எனக் கூறப்படுகிறது.
சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய ஹமீதுல் சீக்கிரம் பணம் சம்பாரிக்க வேண்டும் எனும் நோக்கத்தில், நசீமாவின் உதவியுடன் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக, கைது செய்யப்பட்ட நசீமா மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கியப் புள்ளியாக இருக்ககூடும் என்று கூறப்படும் நிலையில் அவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.