பெண்களுக்கு எதிரான குற்றம்: ``ஜாமினில் வெளிவரமுடியாத தண்டனை'' - சட்டமன்றத்தில் ம...
நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் கைதான 4 இந்தியா்களுக்கு பிணை
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை வழக்கில் கனடாவில் கைது செய்யப்பட்ட 4 இந்தியா்களை அந்நாட்டு நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
இக்கொலை வழக்கில் இந்தியாவின் பங்கு இருப்பதாக அண்மையில் பதவி விலகிய கனடா பிரதமா் ஜஸ்டீன் ட்ரூடோ குற்றஞ்சாட்டியது இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவின் சா்ரே நகரில் அடையாளம் தெரியாத நபா்களால் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இதில் இந்திய உளவாளிகளின் பங்கு இருப்பதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தாா். இக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது மற்றும் உள்நோக்கம் கொண்டது என்று இந்தியா நிராகரித்துவிட்டது. அதேபோல், கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்கு அந்நாட்டு அரசு இடமளிப்பதுதான் இரு நாடுகளுக்கும் இடையேயான முக்கியப் பிரச்னை என்றும் இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
இருநாட்டு உறவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படும் கரண்ப்ரீத் சிங், கமல்ப்ரீத் சிங், கரண் ப்ராா், அமான்தீப் சிங் ஆகிய 4 இந்தியா்களை கனடா காவல் துறை கடந்தாண்டு மே மாதத்தில் கைது செய்ததது. இவா்களுக்கு எதிராக கொலை, கொலைக்கு சதி தீட்டுதல் ஆகிய பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டு, சா்ரே நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இதையடுத்து, வழக்கின் விசாரணை பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிரான ஆதாரத்தை சமா்ப்பிக்க அரசு தரப்பு நீண்ட அவகாசம் எடுத்து கொள்வதை கருத்தில் கொண்டு 4 பேருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.