தில்லி தேர்தல்: ஜே.பி. நட்டாவுடன் அமித் ஷா சந்திப்பு!
2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தில்லி தேர்தலுக்கு கட்சி தயாராகி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார்.
முன்னதாக நேற்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நிர்வாகக் குழுவுடன் மாநில பாஜ அலுவலகத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கட்சியின் அமைப்பு ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்து கட்சி உறுப்பினர்களுக்கு வழிகாட்டினார்.
இந்த கூட்டத்தில் தில்லி மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவ், தேர்தல் பொறுப்பாளர் பைஜயந்த் ஜெய் பாண்டா, இணை தேர்தல் பொறுப்பாளர் அதுல் கர்க் (எம்பி), இணை பொறுப்பாளர் அல்கா குர்ஜார், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் பவன் ராணா, எம்பி ஹர்ஷ் மல்ஹோத்ரா மற்றும் எம்பி மனோஜ் திவாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், இன்று நட்டா அவரது இல்லத்தில் நடைபெறும் முக்கியமான மையக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அமித் ஷா வந்துள்ளார்.