Game Changer Review: 'அக்கறை' அரசியல், பார்முலா காதல் காட்சிகள், பிரமாண்டங்கள் - இவை மட்டும் போதுமா?
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் கலெக்டராக பொறுப்பேற்கிறார் ராம் நந்தன் (ராம் சரண்). தனது மாவட்டத்திலிருந்து குற்றவாளிகளை அகற்றும் பணியில், ஆளும் கட்சியின் முதலமைச்சரின் மகனும், அமைச்சருமான மோபிதேவியை (எஸ்.ஜே.சூர்யா) எதிர்கொள்கிறார். இந்நிலையில், பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் சத்தியமூர்த்தியை (ஸ்ரீ காந்த்) வயதான பார்வதி (அஞ்சலி) சந்திக்க மாரடைப்பில் உயிரிழக்கிறார் முதல்வர்.
அவரது மறைவுக்குப் பிறகு அடுத்த முதல்வராக மோபிதேவி தயாராக, மறைந்த சத்தியமூர்த்தியின் கடைசி விருப்பம் அடங்கிய வீடியோ பதிவு வெளியாகிறது. அந்த காணொலியில் இருப்பது என்ன, அஞ்சலிக்கும் சத்தியமூர்த்திக்கும் இருக்கும் பிளாஷ்பேக் என்ன, மோபிதேவியை ராம் நந்தன் வென்றாரா என்பதே 'கேம் சேஞ்சர்' படத்தின் கதை.
ஈர்ப்பு விசையை மறக்க வைத்து எதிரிகளைப் பந்தாடும் கலெக்டர், கட்டுக்கடங்காத கோபத்தால் எதிரிகளை அடித்துத் துவைக்கும் கல்லூரி மாணவன், போராட்ட களத்தில் மக்களோடு நிற்கும் போராளி என முப்பரிமாணங்களில் இரண்டு கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறார் ராம் சரண். இதில் அப்பண்ணாபவாகத் திக்கித் திணறிப் பேசும் இடம், துரோகத்தால் வீழ்த்தப்படுகிற இடம் ஆகியவற்றில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். மற்ற இரண்டு பாத்திரங்களிலும் ரியாக்ஷன் பற்றாக்குறையுடன் ஸ்டைல், ஆக்சன் மட்டுமே மிஞ்சுவதால் தேவையான தாக்கம் மிஸ்ஸிங்! சாதாரண டெம்ப்ளேட் வில்லன் பாத்திரம் என்றாலும் எஸ்.ஜே சூர்யா தனக்கே உரிய மேனரிஸத்தால் ஆங்காங்கே ஒன்லைனர்களால் மெருகேற்றியிருக்கிறார். அவருக்கு அண்ணனாக வருகிற ஜெயராம், சோர்வடையும் நம்மை ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டிக் காப்பாற்ற முயல்கிறார்.
நாயகியாக வரும் கியாரா அத்வானிக்கு நாயகனுக்கு அறிவுரை வழங்கும் ஆதிகாலத்து வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. கூடவே டூயட் பாடல்களும்! (ரொம்ப புதுசு சார்!) இரண்டு பரிமாணங்களில் வரும் அஞ்சலி தனக்குக் கொடுக்கப்பட்ட பணிக்கு நியாயம் சேர்கிறார். சைட் சத்யா கதாபாத்திரத்தில் சுனில் வித்தியாசமான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். ஆனால், இந்த புதிய கதாபாத்திர வடிவமைப்பில் இருக்கும் யோசனையைச் சற்றேனும் நகைச்சுவையாக மாற்றும் எழுத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். பிரம்மானந்தம், வெண்ணிலா கிஷோர், நவீன் சந்திரா போன்ற நடிகர்களை எந்தவித முக்கியத்துவமும் இல்லாமல் வீணடித்திருக்கிறார்கள்.
‘ஆ... ஆ...’ என்று எஸ்.ஜே சூர்யா வருகிற இடங்களில் தெறிக்கும் பின்னணி இசையை வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் தமன். மிகச் சாதாரண காட்சிகள் பலவற்றை, அவரது உற்சாகமூட்டும் பின்னணி இசையால் உயர்த்த டபுள் டூட்டி பார்த்திருப்பது தெரிகிறது. பாடல்களில் 'அருகு மீத', 'கொண்ட தேவர' பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. படத்தொகுப்பாளர் ஷமீர் முகமது, ரூபன் கூட்டணியின் படத்தொகுப்பு மேலும் சிறப்பாக இருந்திருக்கலாம். பல இடங்களில் ஒரு கோர்வையில்லாமல் ஜம்ப் அடிக்கிறது. இரண்டாம் பாதியின் பிற்பகுதியிலும், முதல் பாதியில் உள்ள சில வழக்கமான காட்சிகளையும் இன்னுமே வெட்டி வீசியிருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசின் கேமரா, ஃப்ளாஷ்பேக் பகுதிகளில் சிறப்பான ஒளியுணர்வைத் தந்திருக்கிறது. படம் முழுவதையும் வண்ணங்களால் நிரப்பியிருக்கும் அவரது ரசனையும் பாராட்டத்தக்கது. ஆனால், கதாபாத்திரங்கள் சாதாரணமாக நடந்து செல்லும் வழக்கமான காட்சிகளில் கூட விலை உயர்ந்த வாகனம், வெளிநாட்டு நாய்கள், பஞ்சுமிட்டாய்க்குக் கூட லைட்டிங் வைத்தது எல்லாம் ஃப்ரேமை திகட்ட வைக்கிறதே பாஸு!
'நண்பன்' படத்தில் 'தேஜாவு'வைத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்த இயக்குநர் ஷங்கர், தலைப்பு போட்ட இடத்திலிருந்தே ஒவ்வொரு காட்சியிலும் அவரது படங்கள் உட்படப் பல தமிழ் சினிமா காட்சிகளை நமக்கு 'தேஜாவு'வாக கடத்தியிருக்கிறார். குறிப்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி ராம் நந்தன் ஆட்சியராகப் பொறுப்பேற்ற பிறகு எடுக்கும் நடவடிக்கைகள், 'தொப்' பாடலில் 'முக்கால முக்காபில்லா' நடன காட்சி, அதிகாரிகளைத் தூக்கி வானத்துக்குப் பறக்கவிடுவது போன்றவை எந்தச் சுவாரஸ்யத்தையும் கூட்டவில்லை. காதல் காட்சிகள் நாயகி சொல்வது போல ‘தொப்’ என நம் மேல் கல்லாக விழுகின்றன.
ராம் நந்தன் vs மோபிதேவி முதலில் சந்திக்கிற காட்சி சற்றே ஆறுதலாக அமைகிறது. இப்படியான அரைத்த மாவை அரைத்துள்ள மறுபதிப்பு செய்யப்பட்ட படத்தின் எழுத்துக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தொடங்கி இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் சு.வெங்கடேசன் எனப் பல பெயர்கள் இடம்பெற்றிருப்பது ஆச்சரியமே! 'வணிகப் படம் லாஜிக் பாக்காதீங்க' என்றாலும், அரசியல் காய் நகர்வுகள் எல்லாம் 'ஒரு நியாயம் வேணாமா?' என்றே கேட்க வைக்கின்றன. சட்ட நுணுக்கங்கள் பேசினாலும் காட்சியமைப்பிலிருக்கும் ஓட்டைகள் ‘சிரிங்க சிரிங்க சந்தோஷமா இருங்க’ என்று கேலியாக நம்மைப் பார்த்துச் சிரிக்கவே செய்கின்றன.
இடைவேளைக்கு முந்தைய காட்சி, இரண்டாம் பாதியில் வரும் இருபது நிமிட ஃப்ளாஷ்பேக் எபிசோடில் மட்டுமே திரைக்கதையில் சற்றே சிரத்தை எடுத்துள்ளார்கள். அப்பண்ணாவாக ராம் சரணின் நினைவில் நிற்கும் நடிப்பு, எஸ்.ஜே.சூர்யாவுடனான ஆடுபுலி அரசியல் ஆட்டம் போன்றவை மட்டுமே இந்த 'கேம் சேஞ்சர்'-இன் சுமாரான கேமை மாற்றும் ரவுண்டுகள்!
இருப்பினும் பார்வையாளர்களை வசீகரிக்க எழுத்தை நம்பாமல் சுவருக்கு வண்ணம் பூசுவது, ராட்ச செட் போடுவது, பிரமாண்டம் என்ற பெயரில் கூட்டம் கூட்டுவது என ‘அதே டைலர், அதே வாடகை’ என ஷங்கர் தனது பழைய பாணியிலான இயக்கத்தையே நம்பியிருப்பது மெத்தனப் போக்கையே காட்டுகிறது. நன்றாக நகர்ந்த காட்சிகளை விரைந்து முடித்துவிட்டு, சோதிக்கும் க்ளைமாக்ஸை முடிவில்லாமல் நீட்டிக்கொண்டே சென்றது நம் பொறுமையைச் சோதிக்கும் முயற்சி!
மொத்தத்தில், படத்தின் ப்ளஸைத் தேடி அலைய வைத்திருக்கும் இந்த 'கேம் சேஞ்சர்' எந்த கேமையும் மாற்றவில்லை.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...