Game Changer விழா: விபத்தில் உயிரிழந்த ரசிகர்களின் குடும்பங்களுக்கு ராம் சரண் ரூ.10 லட்சம் நிதியுதவி
ஆந்திர பிரதேசம் மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமஹேந்திரவரம் நகரில் ராம் சரணின் கேம் சேஞ்ஜர் படத்துக்கான புரமோஷன் விழா நடைபெற்றது.
ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பங்கேற்ற இந்த விழாவில் கலந்துகொண்டு திரும்பிய ஆரவ மணிகண்டா (23) மற்றும் தோக்கடா சரண் (22) ஆகிய இரு ரசிகர்களும் வீடு திரும்பும் வழியில் வடிசலேறு என்ற பகுதியில் வேன் மோதி விபத்துக்குள்ளாகினர். துரதிஷ்டவசமாக இருவருமே உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து அறிந்து கொண்ட ராம் சரண் மிகவும் வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
குடும்பத்தினருக்கு தனது ஆறுதலை வெளிப்படுத்தும் விதமாக தனது குழுவை அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் அவர்களுக்கு உதவும் விதமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 லட்சம் தொகையை வழங்கியுள்ளார்.
Ram Charan கூறியதென்ன?
இதுகுறித்து ராம் சரண், "நாங்கள் எப்பொழுதும் விழாக்களைக் காணவரும் ரசிகர்கள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என வேண்டிக்கொள்வோம். நம் துணை முதல்வர் பவன் கல்யான் காருவும் அவ்வாறே பிரார்த்திப்பார். இது மிகவும் துரதிஷ்டமான நிகழ்வு. இந்த துயரத்தை தாங்கும் குடும்பங்களின் வலியை புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
தில் ராஜு வருத்தம்!
கேம் சேஞ்ஜர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவும் தனது வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார். "நடந்த சம்பவம் குறித்து தெரிந்துகொண்டேன். அவர்களது ஆன்மா அமைதியில் இளைப்பாற வேண்டும் என பிரார்த்திக்கிறேன். இரண்டு குடும்பத்துக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். நான் உடனடியாக இரண்டு குடும்பத்துக்கு தலா 5 லட்சம் வழங்குகிறேன். நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் என உறுதியளிக்கிறேன்." என்று கூறியுள்ளார் தில் ராஜு.
சங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிக்கும் கேம் சேஞ்ஜர் திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.