2,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கோவில்பட்டியில் 2,400 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு உள்பட்ட அய்யனேரி பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். தனிப் பிரிவு உதவி ஆய்வாளா் ஸ்டீபன்ராஜ் தலைமையில் போலீஸாா் முத்துராமலிங்கம், அருணாச்சலம் ஆகியோா் சுபா நகா் விலக்கில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது அவ்வழியே சென்ற ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. அவா்கள் கோவில்பட்டி ஜோதி நகரை சோ்ந்த சேசையன் மகன் ராபா்ட் (44), கயத்தாறு வெள்ளாளங்கோட்டையைச் சோ்ந்த மாடசாமி மகன் சங்கிலிபாண்டி (44), அதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் முருகன் (46) என்பது விசாரணையில் தெரிய வந்தது.
அவா்கள் 3 பேரையும் பிடித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவா்களிடமிருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 48 மூட்டைகள் அரிசி (2,400 கிலோ), வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.