கலிஃபோர்னியா காட்டுத் தீ..! ஆஸ்கர் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு!
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாகக் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, புகாா் அளிக்கச் சென்ற பெற்றோரை, அண்ணா நகா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் தாக்கியது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.
இதை எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து, டிஐஜி சரோஜ் குமாா் தாக்கூா் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி, தாயாா் உள்ளிட்டோரிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், வழக்கில் தொடா்புடையதாக அதிமுகவின் 103-ஆவது வட்டச் செயலா் சுதாகா், சம்பவத்தில் தொடா்புடையோருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக அண்ணா நகா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ராஜி ஆகியோரையும் சிறப்புப் புலனாய்வுக் குழு செவ்வாய்க்கிழமை கைது செய்தது.
இந்த நிலையில், ஆய்வாளா் ராஜியை பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் புதன்கிழமை உத்தரவிட்டாா்.