இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலன் காலமானார்
நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசனின் மூத்த சகோதரர் இல.கோபாலன் (83) வயது மூப்பு காரணமாக புதன்கிழமை (ஜன. 8) காலமானார்.
நாகாலாந்து மாநில ஆளுநராக உள்ள இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலன். இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இல.கோபாலன் காலமானார்.
அவரது உடல் சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு வியாழக்கிழமை (ஜன. 9) காலை 10 மணி அளவில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். இல.கணேசன் தனது சகோதரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முதல்வர் இரங்கல்: இல.கணேசனின் சகோதரர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் "எக்ஸ்' தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் அண்ணன் இல.கோபாலன் மறைந்த செய்தி அறிந்து வேதனையடைந்தேன். முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதும், என் மீதும் மாறாத பற்று கொண்ட இல.கணேசனுக்கு ஏற்பட்டுள்ள இழப்பால் அவரைப் போன்றே நானும் வருந்துகிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.