‘பிரேக்கிங் பேட்’ புகழ் வால்டர் ஒயிட் வீட்டின் மதிப்பு ரூ.35 கோடி!
‘பிரேக்கிங் பேட்’ புகழ் வால்டர் ஒயிட்டின் வீட்டின் மதிப்பு 4 மில்லியன் டாலராக (ரூ.35 கோடி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நெட்பிளிக்ஸில் வெளியாகி உலக முழுவதும் கோடிக்கணக்கான அளவில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ளது பிரேக்கிங் பேட் தொடர். இந்தத் தொடர் மெக்சிகோவில் நடைபெறுவது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
பிரேக்கிங் பேட் வின்ஸ் கில்லிகனால் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட அமெரிக்க குற்றவியல் தொலைக்காட்சி நெடுந்தொடர். இது 2008 ஆம் முதல்முறையாக வெளியானது.
இதில், கதாநாயகனான 50 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க புற்றுநோய் பாதிக்கப்பட்ட வேதியியல் பேராசிரியர், முன்னாள் மாணவருடன் இணைந்து ‘மெத்’ எனப்படும் போதைப்பொருளைத் தயாரித்து அதன் பின்னர் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களும், அவர்கள் எவ்வாறு போதைப் பொருள் கடத்தல் சாம்ராஜ்ஜியத்தில் மிகப்பெரிய இடத்தை அடைந்தனர் என்பது பற்றி காட்டப்பட்டிருக்கும்.
இந்தத் தொடரில் கதாநாயகன் பேசியிருந்த “சே மை நேம்” என்ற வசனமும் உலகளவிலும், மீம் டெம்ப்லேட்களிலும் மிகவும் பிரபலம். அதிகளவிலான ரசிகர்களையும், உலகளவில் அதிக புள்ளிகளும், ஐஎம்டிபி தரவரிசையிலும் 9.5 க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளது.
அந்தத் தொடரில் வால்டர் ஒயிட் குடியிருந்த வீடு புதுபிக்கப்பட்டு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதனால், அந்த வீட்டை வாங்குவதற்கு ரசிகர் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவின் அல்புகெர்கியில் இந்த வீடு அமைந்துள்ளது. பண்ணை வீடு போன்ற தோற்றத்தில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில், 4 படுக்கையறைகள், 2 கழிப்பறை மற்றும் பின்புறத்தில் மிகப்பெரிய நீச்சல் குளமும் அமைந்துள்ளது.
இந்த வீட்டின் தற்போதைய சந்தை மதிப்பில் 4 மில்லியன் டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது(இந்திய மதிப்பில் ரூ.35 கோடிக்கும் அதிகமாகும்). இதனை அமெரிக்க ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜில்லோ தெரிவித்துள்ளது. இது இந்த வீட்டின் அருகில் உள்ள வீடுகளைவிட பத்து மடங்கு அதிகமாகும்.
இதுபற்றி வீட்டின் உரிமையாளர் ஜோன் குயிண்டா கூறுகையில், “ தொலைக்காட்சித் தொடரின் மூலம் இந்த வீடு பிரபலமடைந்தாலும் இதனால், எங்களில் இயல்பு வாழ்க்கைப் பாதிப்படைந்துள்ளது. இது எங்களின் பூர்விக வீடு. 1973 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
கிட்டத்தட்ட 52 ஆண்டுகள் முடிந்துவிட்டன. எனவே, நமது நினைவுகளை மட்டும் விட்டுவிட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. வீட்டை விற்பதற்கான வேறு காரணம் எதுவுமில்லை. முதன்முதலாக பிரேக்கிங் பேட் குழுவினர் 2006 ஆம் ஆண்டு எங்களது வீட்டை ஆய்வு செய்தனர். எனது அம்மாவிடம் கேட்டு உங்கள் வீட்டை மையப்படுத்தி ஒரு தொடரையும் உருவாக்கப் போவதாக தெரிவித்தனர்” என்றார்.