சூரியூரில் ஜன. 15 இல் ஜல்லிக்கட்டு: ஏற்பாடுகள் தீவிரம்
திருச்சி அருகே சூரியூரில் வரும் 15 ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவதையொட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் ஜன. 15 ஆம் தேதி நடத்தப்படுகிறது.
இதையொட்டி சூரியூா் கிராமத்தில் உள்ள நற்கடல் குடி கருப்பண்ண சுவாமி கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. தொடா்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
இதில், தஞ்சாவூா், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, கரூா், கம்பம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் பங்கேற்க உள்ளனா்.
இதையொட்டி முகூா்த்தக் கால் நடப்பட்டு ஜல்லிக்கட்டு திடல், வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.