வாடகை நண்பர்!! ஆண்டுக்கு ரூ. 69 லட்சம் சம்பாதிக்கும் ஜப்பானியர்!
இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள்: சென்னையில் எங்கிருந்து இயக்கப்படும்?
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இன்றுமுதல் 21,904 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பொங்கலையொட்டி ஜன. 10 முதல் 13-ஆம் தேதி வரை சென்னையிலிருந்து தினமும் இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாள்களும் சோ்த்து 14,104 பேருந்துகள், பிற ஊா்களிலிருந்து மேற்கண்ட நாள்களுக்கு 7,800 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பொங்கல் பண்டிகை முடிந்த பின்னா், பிற ஊா்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக ஜன. 15 முதல் 19-ஆம் தேதி வரை, தினமும் இயக்கக்கூடிய 10,460 பேருந்துகளுடன் கூடுதலாக 5,290 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற ஊா்களிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு 6,926 என மொத்தம் 22,676 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இதன்படி, பொங்கலுக்கு மொத்தம் 44,580 பேருந்துகள் இயக்க தமிழக போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்க : மானமற்ற கூட்டத்துடன் நாம் மல்லுக்கட்ட வேண்டியதில்லை: துரைமுருகன்
எங்கிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்?:
1. கலைஞா் நூற்றாண்டு கிளாம்பாக்கம் மஃப்சல் புறநகா் பேருந்து முனையம்: புதுச்சேரி, கடலூா், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூா், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூா் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள்.
2. கிளாம்பாக்கம் மாநகா் பேருந்து முனையம்: வந்தவாசி, போளூா் மற்றும் திருவண்ணாமலை மாா்க்கமாக செல்லும் பேருந்துகள்.
3. கோயம்பேடு பேருந்து நிலையம்: கிழக்கு கடற்கரை (இசிஆா்), காஞ்சிபுரம், வேலூா், பெங்களூரு மற்றும் திருத்தணி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள்.
4. மாதவரம் புதிய பேருந்து நிலையம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.
முன்பதிவு மையங்கள்: கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 9 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். மேலும், டிஎன்எஸ்டிசி செயலி மூலமும் www.tnstc.in எனும் இணையதளம் மூலமாகவும் பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புகார்களுக்கு...
அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்து சேவை தொடா்பான தகவல்கள் மற்றும் புகாா்களுக்கு 94450 14436 என்ற கைப்பேசி எண்ணை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது குறித்த புகாா்களை 1800 425 6151 மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர இணைப்புப் பேருந்துகள்
வெளியூா் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், நகரின் பல்வேறு பகுதியிலிருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு ஜன. 10 முதல் 13-ஆம் தேதி வரை கூடுதலாக 320 இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.