ரஷியா: கல்லூரி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ. 81,000 ஊக்கத்தொகை!
கல்லூரி மாணவிகள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றால் ஒரு லட்சம் ரூபிள் வழங்கப்படும் என்று ரஷியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, ஜப்பான், தென் கொரியா நாடுகளை தொடர்ந்து, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ரஷிய அரசும் ஊக்கத்தொகை வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கவலை அளிக்கும் மக்கள்தொகை
ரஷியாவில் உயிரிழப்பு விகிதத்தைவிட பிறப்பு விகிதம் குறைவு, மக்கள் வேறு பகுதிகளுக்கு குடியேற்றம் போன்ற காரணங்களால் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகின்றது.
ரஷியா - உக்ரைன் இடையேயான போர் மக்கள்தொகை விகிதத்தை மேலும் கவலை அடையவைத்துள்ளது. ரஷியாவில் வரலாறு காணாத அளவுக்கு கடந்தாண்டு பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.
2024 முதல் பாதியில் வெறும் 5,99,600 குழந்தைகள் மட்டுமே ரஷியாவில் பிறந்துள்ளன. 25 ஆண்டுகள் தரவுகளில் இதுவே மிகக் குறைந்த அளவு. இதனை நாட்டின் எதிர்கால பேரழிவு என்று ரஷிய அரசு குறிப்பிட்டுள்ளது.
கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை
ரஷியாவின் மக்கள்தொகையை அதிகரிக்க மத்திய அரசுடன் இணைந்து மாகாண அரசுகளும் பல்வேறு விழிப்புணர்வையும் பிரசாரத்தையும் முன்னெடுத்துள்ளனர்.
கரேலியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் முழு நேர மாணவிகளாக பதிவு செய்யப்பட்ட 25 வயதுக்கு உள்பட்டவர்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றுக் கொண்டால் இந்திய மதிப்பின்படி ரூ. 81,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்தால் ஊக்கத்தொகை வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிறந்த பிறகு நோய் காரணமாக குழந்தைகள் உயிரிழந்தாலோ அல்லது குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுமா என்பது தெரிவிக்கப்படவில்லை.
மேலும், ரஷியாவின் பல்வேறு மாகாணங்களில் இதுபோன்ற ஊக்கத்தொகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : அதிபர் தேர்தலில் தான் போட்டியிட்டிருந்தால் டிரம்பை தோற்கடித்திருப்பேன்: அதிபர் ஜோ பைடன்!
ரஷிய அரசும் உதவித் தொகை அதிகரிப்பு
இதனிடையே, ரஷியாவில் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அந்நாட்டின் மத்திய அரசு இந்தாண்டு அதிகரித்துள்ளது.
முதல் குழந்தைக்கு 630,400 ரூபிள் வழங்கப்பட்ட நிலையில், 677,000 ரூபிளாகவும், இரண்டாவது குழந்தைக்கு 833,000 ரூபிளில் இருந்து 894,000 ரூபிளாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.