சென்னையிலிருந்து சபரிமலைக்கு சைக்கிள் பயணம் செய்யும் முதியவர்!
நாக்கு பிளவு : `சிறையில் மனநல சிகிச்சை; இனி பாடி மாடிஃபிகேஷன்..!' - ஜாமீனில் வந்த இளைஞர்
திருச்சி மாநகரம், வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (25). இவர், சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்ற பெயரில் டாட்டூ கடை நடத்தி வருகிறார். இவர், தன்னுடைய நாக்கு நுனியை பிளவுபடுத்தி அதில் டாட்டூ வரைந்து உள்ளார். அதே போல, அவருடைய நண்பரும், அவருடன் பணியாற்றுபவருமான ஜெயராமன் என்பவருக்கும் நாக்கின் நுனியை வெட்டி டாட்டூ வரைந்துள்ளார். அதனை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், எந்தவித அனுமதியும் பெறாமல் இதுபோன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலை செய்ததன் காரணமாக ஹரிஹரனை திருச்சி கோட்டை போலீஸார் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதனையடுத்து, சிறையிலிருந்து நிபந்தனை ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஹரிஹரன், அந்த வீடியோவில்,
“பாடி மாடிஃபிகேஷன் என்ற நாக்கு பிளவு முறையினை அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டேன். இது குறித்து, முறையாக நான் கற்கவில்லை. அதனால், புகார் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டேன்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், டி.ஐ.ஜி வருண் குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் சிறையில் எனக்கு மனநல சிகிச்சை வழங்கப்பட்டது. அதோடு, பாடி மாடிஃபிகேஷன் செய்வது தவறு என்றும் எடுத்துரைக்கப்பட்டது. அதனை நான் புரிந்து கொண்டேன். அதனால், யாரும் பாடி மாடிஃபிகேஷன் செய்ய வேண்டாம். இந்தியாவில் இதுவரை 10 பேர் மட்டுமே பாடி மாடிஃபிகேஷன் செய்துள்ளனர். நானும் அவ்வாறு செய்தேன். தற்பொழுது அது தவறு என்பதை புரிந்து கொண்டுள்ளேன். இனி, யாருக்கும் இதுபோன்ற பாடி மாடிஃபிகேஷனை நான் செய்ய மாட்டேன். நான் கைது செய்யப்பட்ட பின் சில ரெளடிகளுடனும், அரசியல்வாதிகளுடனும் எனக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் பரவியது. அது தவறு. எனக்கு யாருடனும் எந்த தொடர்பும் இல்லை. நான் டாட்டூ வரையும் கடை நடத்தி வருகிறேன். அது தவிர, நான் வேறு எதுவும் செய்யவில்லை” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.