கொலைசெய்யப்பட்ட நபர் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு; தண்டனை அனுபவித்த சகோ...
மகா கும்பமேளா: `50 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்' -இஸ்கானுடன் இணைந்து செய்யும் அதானி குழுமம்!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யராஜ் நகரில் கும்பமேளா வரும் 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 26-ம் தேதி முடிவடைகிறது. இக்கும்பமேளாவிற்காக நாடு முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக மாநில அரசு ஆயிரக்கணக்கான தற்காலிக குடில்களை கட்டி வருகிறது. கும்பமேளாவிற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட இருக்கிறது.
ஆன்மிக இயக்கமான இஸ்கான் அமைப்பு, கும்பமேளா நடைபெறும் இடத்தில் இரண்டு ராட்சத சமையல் அறைகளை ஏற்படுத்தி பக்தர்களுக்கு உணவு சமைத்து வழங்க இருக்கிறது. இஸ்கான் அமைப்பின் இந்த சேவையில் தொழிலதிபர் கெளதம் அதானி, தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். இதற்காக அதானி இஸ்கான் அமைப்பின் தலைவர் குருபிரசாத் சுவாமியை சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பிற்கு பிறகு நிருபர்களை சந்தித்த அதானி, கும்பமேளா நடைபெறும் இடம் சேவை செய்வதற்கு புனிதமான இடம். அங்கு ஒவ்வொருவரும் கடவுளுக்கு சேவை செய்வதாக நினைத்து தங்களை சேவையில் ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.
இஸ்கான் அமைப்புடன் இணைந்து மகா கும்பமேளா பக்தர்களுக்கு 'மகாபிரசாத சேவை' தொடங்குவது எனது அதிர்ஷ்டம். தாய் அன்னபூர்ணியின் ஆசிர்வாதத்தில் அனைவருக்கும் இலவச உணவு விநியோகம் செய்யப்படும். இன்று குரு பிரசாத் சுவாமியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் சேவைக்கான அர்ப்பணிப்பின் சக்தியை நான் ஆழமாக உணர்ந்தேன். உண்மையில் சேவை என்பது தேசபக்தியின் மிக உயர்ந்த வடிவம். சேவை என்பது தியானம், சேவையே பிரார்த்தனை, சேவையே கடவுள்'' என்று தெரிவித்தார்.
குரு பிரசாத் சுவாமியும் அதானியின் சேவையை வெகுவாக புகழ்ந்தார். கும்பமேளா ஏற்பாடுகளை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் பார்வையிட்டார். அதோடு கும்பமேளாவையொட்டி பிரக்ராஜில் அமைச்சரை கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.