"பெரியாருக்கும் சமூகநீதிக்கும் இதுதான் சம்பந்தம்..." - சீமானுக்கு ஒரு கடிதம்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஒரு கடிதம்!
ஊடகங்கள் முன்னிலையில் பெரியார் பற்றிய உங்களது வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதப்பட்ட கடிதம் இது. "பெரியாருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்?" எனக் கேட்டு, சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியார் பற்றி அவதூறாகப் பேசும் உங்களது முதிர்ச்சியற்ற வாதம், பெரியாரை அல்ல தமிழக மக்களைக் கொச்சைப்படுத்தும் செயல். சமூகப் பொறுப்பின்றி இவ்வாறான ஆதாரமற்ற, சொல்லப்படாத விஷயங்களைப் பேசி பொய்யான வாதத்தில் ஈடுபடுவதைப் பார்க்கையில் நீங்கள் பக்குவமற்ற அரசியல்வாதி என்று புரிந்துகொள்ள முடிகிறது.
எப்போதும் தமிழ்த் தேசியம் என்று மேடைக்கு மேடை பேசிக்கொண்டிருக்கும் வேளையில் சிறிதேனும் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டிய தேவை உங்களுக்கு உள்ளது. நாகரிகமின்றி கீழ்த்தரமான வார்த்தைகளை வீசி செல்வதை ஒருபோதும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. ஊடகத்தின் முன்னிலையில் பெரியாரை வக்கிர எண்ணத்தோடு பேசியது எங்களின் நம்பிக்கையை அவமரியாதைச் செய்யக்கூடியது. உங்களுக்குக் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அதை இவ்வாறு வெளிப்படுத்துவது அநாகரீகம். இந்த கடிதம் மூலம் பெரியாரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.
எனது சிறுவயது பாடப்புத்தகத்தில் எனக்கு அறிமுகமானவர் தந்தை பெரியார். பெண்ணுரிமை என்று நினைக்கையில் நமது எண்ணத்தில் முதலில் தோன்றுவது பெரியார்தான் என்று கூறுவதில் ஆச்சரியம் இல்லை. இன்று வரையில் பெண்ணுரிமை குறித்தான எந்த ஒரு விஷயத்திலும் பெரியாரின் பங்கு, என் கண் முன்னே எதிரொலித்துக் கொண்டுதான் உள்ளது. சாதிய முறைகளுக்கு எதிராக அவர் விதைத்த கருத்துகளை இன்றும் அறுவடை செய்து கொண்டே இருக்கிறோம். பயன்பெற்றுக் கொண்டே இருக்கின்றோம். முற்போக்கு சிந்தனை விதைகளை இம்மண்ணில் தூவிய புரட்சியாளர் பெரியார். வைக்கம் போராட்டக் களம் கண்ட சீர்திருத்தவாதி ஆற்றிய சில பணிகளைக் கூற விழைகிறேன்.
உடன்கட்டை ஏறும் வழக்கத்தைத் தடுத்தால் மட்டும் பயனில்லை என்றும் அவர்களுக்கான மறுமணம் எவ்வளவு முக்கியம் என்றும் தனது பேச்சுகளில் முன்வைக்கத் தொடங்கி, கூட்டங்கள் நடத்தி மக்களிடம் நேரடியாக உரையாடியவர். பெண்ணிற்கு மட்டும் விதவை என்ற பெயரைச் சூட்டி அடிமைப்படுத்துவது அவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்று உணர்த்தி, சமூக மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்தார். அதன் விளைவாகத்தான் நம் கண்ணோட்டம் இன்று மாறியுள்ளது.
நம் குடும்பத்தில், நம் உறவினர் வட்டாரத்தில்கூட யாரேனும் ஒருவர் இந்த மாற்றம் மூலம் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். குலக்கல்வி சம்பிரதாயத்தை எதிர்த்து எல்லோரும் புத்தகப்பைச் சுமந்து நலம் பெற்றிட மூலை முடுக்கெல்லாம் அலைந்து திரிந்தார். சம நீதி பெற்றுத் தந்தார். மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று சுயமரியாதையைப் பிறப்புரிமை என்று உணர்த்தி சென்றவர். இன்றளவும் அவரின் செயல்கள் உங்களைப் போன்ற அரசியல் ஆதாயம் தேடும் சுயநலவாதிகளுக்கு உறுத்துகிறது என்றால், உறங்க விடாமல் எதையேனும் இவ்வாறு புலம்பவிடுகிறது என்றால் அவர்தான் எங்களுக்கு அரசியல் ஆசான்.
குலத்தொழில் வைத்து அடிமை முறையைப் பின்பற்ற வைத்த பிற்போக்கு மடமையை எதிர்த்த எம் தந்தை பெரியாரின் முற்போக்குச் செயலால்தான், இன்றைக்குச் சாதாரண குடும்பத்தில் பிறந்தோரும் அதிகார பதவிக்கு வர முடிகிறது. "தாய்மார்கள் எல்லாம் நாளைக்கு நீங்க ஏரோபிளைன் ஓட்டனும், சந்திர மண்டலத்துக்குப் போய் குடியிருக்க வேணும்" என்ற அவரது உரையை உங்கள் செவி கொடுத்துக் கேட்க வேண்டும்.
ஒருவனை அவனது பிறவி காரணமாகவோ அல்லது தொழில் காரணமாகவோ சுத்தமானவனா அல்லது அசுத்தமானவனா என்று பிரிக்கும் சாதிய ஏற்றத் தாழ்வுக்கு நான் எப்போதும் எதிராக நிற்பேன் என்று முழக்கமிட்டவர் எங்கள் பெரியார். அவரது செயல்களால் மாற்றம் நிகழ்த்தியவர். இன்று தமிழ்நாட்டில் மக்களின் பின்னொட்டு பெயராகச் சாதிப் பெயரினைப் பார்க்க முடிவதில்லை. அரசியல், சட்டம், மக்களது சிந்தனை என எல்லா இடத்திலும் சாதியையும், அதன் பயனாகக் குடிகொள்ளும் வன்முறையையும் தகர்த்தெறிய முன்மொழிந்தவர் பெரியார்.
மதுவிலக்கு என்ற பொய் பிரச்சாரம் வேண்டாம் என்று 'மதுக்கெடுதி ஒழிதல்' என்ற செயலை முன்னெடுத்தவர். மூடநம்பிக்கை வழக்கங்களை முறிக்க எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் பேராசைக்காரர்களைக் கதி கலங்க வைத்தது. தனது 94 வயதிலும் சமூக தொண்டு செய்தே பழுத்த பழம்.
சரியான புரிதல் மற்றும் தெளிவு இல்லாமல் அவரைப் பற்றி வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் ஏற்புடையது அல்ல. உடல்நிலை மற்றும் வயது மூப்பு காரணமாகக் கழகத்தை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை வந்தபோது தனது உதவியாளரை மணம் செய்து கொண்டார். அப்போது பெரியாருக்கு 69 வயது, மணியம்மைக்கு 30 வயதுக்கு மேல் இருக்கும். மணியம்மை தாமாக முன்வந்து முழு ஒப்புதலோடு பெரியாரின் உதவிக்காகத் திருமணம் நடைபெற்றது.
இந்த விசயங்களைப் புரிதலோடு அணுகுவது சிறந்தது. தொடர்ந்து தேவையற்ற பொய்யான தகவல்களைப் பரப்புவது முட்டாள்தனம். இறுதி மூச்சு வரையில் ஊருக்காக உழைத்தவர் பெரியார். எத்தனை சமூகப் போராட்டங்கள், மாநாடுகள் கண்டுவிட்டோம் அவர் இருக்கையில். பெரியாரைப் பற்றி அறியாத, அவரைப் பார்க்காத என அனைவரும் ஏதாவது ஒரு விஷயத்தில் அவரின் சமூக நீதிக்கான தாக்கத்தைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதை யாரால் மறுக்க முடியும்?
அவரின் செயற்கரிய செயல்களை உதறி விட்டு, யாம் அடைந்த பயனை மறந்து விட்டு இவ்வாறு அவதூறு பரப்புவது யாருக்கு லாபம்? சமூகம் பற்றிய அக்கறை இல்லாமல் தமிழக மக்களின் மனதைத் தரம் குறைந்த வார்த்தைகளால் புண்படுத்திய உங்களது செயல் அருவருக்கத்தக்கது என்று கருதுகிறேன். யாருடைய கருத்துகளையும் செயல்களையும் கண்மூடித்தனமாக நம்பாமல் யாவரும் சுயமாக யோசித்துப் பகுத்தறிவோடு முடிவெடுப்பது சிறந்தது என்று கூறிவிட்டுச் சென்றவர் பெரியார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb