இளம் வீரர்களை வழிநடத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி: ஸ்டீவ் ஸ்மித்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களுடன் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அண்மையில் அறிவித்தது. பாட் கம்மின்ஸுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் அணியைக் கேப்டனாக வழிநடத்தவுள்ளார்.
இதையும் படிக்க: ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!
இளம் வீரர்களை வழிநடத்துவதில் மகிழ்ச்சி
இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம், ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பளித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர்களான, நாதன் மெக்ஸ்வீனி, கூப்பர் கன்னோலி மற்றும் சாம் கான்ஸ்டாஸுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இளம் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி அவர்களைக் கேப்டனாக வழிநடத்தவுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிம் இக்பால், அலெக்ஸ் ஹேல்ஸ்! என்ன பிரச்னை?
இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்னால் முடிந்த அளவுக்கு என்னுடைய அனுபவங்களை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்கள் சிறப்பாக செயல்பட உதவுவேன். இந்தியத் துணைக் கண்டத்தில் அதிக அளவிலான போட்டிகளில் விளையாடியுள்ளேன். அதனால், இங்குள்ள ஆடுகளங்களின் தன்மை எனக்கு நன்றாக தெரியும். ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு உகந்ததாக இருக்கும்.
சுழற்பந்துவீச்சாளர்களை திறம்பட எதிர்கொள்ளும் திறனை வீரர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். எனது கிரிக்கெட் பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நான், இளம் வீரர்களுடன் என்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டு உலகின் அனைத்து மைதானங்களிலும் அவர்கள் வெற்றிகரமாக செயல்படுவதற்கு உதவுவேன் என்றார்.
இதையும் படிக்க: விக்கெட் கீப்பருக்கு கடும் போட்டி: கே.எல்.ராகுலுக்கு ஓய்வளிக்க முடிவா?
ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளும் காலே சர்வதேச மைதானத்தில் நடைபெறுகின்றன. முதல் போட்டி ஜனவரி 29 ஆம் தேதியும், இரண்டாவது போட்டி பிப்ரவரி 6 ஆம் தேதியும் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.