கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
Toda Tribe: ``காடு மலைகள் செழிக்க வேண்டும்'' -ஊட்டியில் பாரம்பர்ய புத்தாண்டு கொண்டாடிய தோடர்கள்
6 வகையான பழங்குடி மக்கள்
பழங்குடிகளின் தொட்டில் என வர்ணிக்கப்படும் நீலகிரி மலையில் 6 வகையான பண்டைய பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பழங்குடிகளும் தங்களுக்கே உரிய மொழி, தொழில், உணவு, உடை, இசை, நடனம், பாரம்பர்யம் போன்றவற்றை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். பாரம்பர்யம் அழியாமல் பாதுகாக்கும் முயற்சியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
'மொத்வர்த்' எனப்படும் புத்தாண்டு
அப்பர் ஹில்ஸ் எனப்படும் குளிர் நிறைந்த நீலகிரி மலை மேலிட பகுதிகளில் வாழும் பழங்குடி இனக் குழுக்களில் ஒன்றுதான் தோடர் பழங்குடிகள். ஆயர் இனமாக கருதப்படும் தோடர்கள் உலகின் தனித்துவமான வளர்ப்பு எருமைகளான தோடர் எருமைகளை வளர்ப்பதை முக்கிய தொழிலாக கொண்டிருக்கிறார்கள். கடவுளை விட தங்களின் வளர்ப்பு எருமைகளையே உயர்வாக வணங்கி வாழ்ந்து வருகின்றனர்.
'மொத்வர்த்' எனப்படும் தங்களின் வருட பிறப்பு நாளை வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். ஒட்டுமொத்த மொத்த தோடர் பழங்குடிகளின் தாய் கிராமமான ஊட்டி அருகில் உள்ள முத்தநாடு மந்தில் ஒன்றுகூடி பாரம்பர்ய உடையில் நடனமாடி இயற்கையை வழிபடுவது வழக்கம்.
பாரம்பர்ய போட்டிகள்
மொத்வர்த் திருவிழாவை முன்னிட்டு முத்தநாடு மந்தில் நேற்று ஒன்றுகூடிய தோடர்கள் தங்களின் குலதெய்வ கோயிலில் வழிபாடு செய்தனர். காடுகள், மலைகள், ஆறுகள், மரங்கள் செழிக்க வேண்டும் என பாடல்கள் பாடியும் நடனமாடியும் இயற்கையை வணங்கினர். இதனைத் தொடர்ந்து இளவட்டக்கல் தூக்கும் போட்டி உள்ளிட்ட பாரம்பர்ய போட்டிகளும் நடைபெற்றன.
தோடர்களின் நம்பிக்கை
இது குறித்து தெரிவித்த தோடர் பழங்குடிகள் , " மொத்வர்த் எனப்படும் வருடப்பிறப்பு தான் ஒரு ஆண்டின் வளத்தை தீர்மானம் செய்யும் நாள் என்பது எங்களின் நம்பிக்கை. எனவே, முதல் நாளை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இயற்கையை வணங்கி வரவேற்றால் வருடம் முழுவதும் காடு, மலைகள் செழித்து கால்நடைகள் மேய்ச்சலுக்கும் விளைநிலங்களும் செழிக்கும் என்பது நம்பிக்கை. அதனை இன்றளவும் தொடர்ந்து செய்து வருகிறோம்" என்றனர்.