செய்திகள் :

ஸ்ரீகிருஷ்ணர் ஏன் 'மாதங்களில் நான் மார்கழி' என்றான்?

post image
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்பது ஸ்ரீகிருஷ்ணர் திருவாய்மொழி. இறைவழிபாட்டிற்கு உரிய புனிதமான இந்த மார்கழி, பெண்களுக்கும் உகந்த உற்சாக மாதமாக அமைகின்றது.
ஸ்ரீகிருஷ்ணர்

மார்கழி மாதம் முழுவதும் வாயிலிலும், முற்றத்திலும் அதிகாலை விளக்கேற்றி வண்ணக் கோலமிட்டு அலங்கரித்தலும்;  பாவை நோன்பு நோற்றலும் பெண்களுக்கு உரியன.   சிவபெருமானுக்கு விசேஷமான ஆருத்ரா அபிஷேகமும் (திருவாதிரை - 13.01.2025); திருமாலுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசியும் (10.01.2025); ஆஞ்சனேயருக்கு உரிய ஹனுமத் ஜெயந்தியும் (30.12.2024) இம்மாதத்திற்குரிய  அனைவரும் அறிந்த பிரபலமான விசேஷங்கள்.  அதிகாலை நேரத்தில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாராயணம் செய்வதும் நமது  தொன்று தொட்ட வழக்கம். 

மார்கழி மாதமும்; பூசணியும் மருத நிலத் தெய்வமாகிய இந்திரனுக்கு உகந்தவை.‌  கோலமிட்டு அலங்கரித்த வாயில் முற்றங்களில் பசுஞ்சாண உருண்டைகளில் பூசணிப்பூக்களைப்  பொதிந்து வைத்து அலங்கரிப்பது நமது சம்பிரதாயம். தங்க நிறப் பூக்களான பூசணிப் பூக்களை வைத்து மாதம் முழுவதும் கோலமிட்டு அலங்கரிப்பதன் மூலம் இந்திரனை மகிழ்விப்பதால் அவரருளால்  வீட்டில் செல்வம் தழைத்திடும் என்பது ஐதீகம்.  தவிர மஞ்சள் நிறம் மங்கலத்தின் அடையாளம்.   எனவே, இல்லங்களில்  சகலசெளபாக்கியங்களும்  நிறைந்திருக்க வேண்டி  இம்மாதத்தில் செவ்வந்தி, பொன்னரளி,  கொன்றை போன்ற மஞ்சள் நிறப் பூக்களால் இறையை பூஜிப்பதும், கதம்பமாக காய்களைச் சேர்த்த பதார்த்தங்களை நிவேதிப்பதும் திருமகளின்அருளைக் கூட்டும் என்பது ஐதீகம். 

16.12.2024 மார்கழி 01 - தனுர் சங்கராந்தி

ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்றும் சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்குள் பிரவேசிக்கின்றார்.  இந்த பிரவேசத்திற்கு  'சங்கராந்தி' என்பது பெயர்.  சூரியனின் இத்தகு நகர்விற்கு வடமொழியில் 'சங்க்ரமண'  என்பது பெயர். 

தனுர் மாதமாகிய மார்கழி மாத பிறப்பிற்கு தனுர் சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் சூரியனின் பிரதிமையை சுத்தமான நீரில் கலசத்தில் இட்டு ஆவாஹனம் செய்து வழிபடுவர். அந்நீரினையும் ; உணவினையும் தானம் செய்வதும் மரபு.  இதனால் கிரஹ தோஷங்கள் நீங்கும் என்பது பலன்.  தவிர மார்கழி மாதமானது சிவபெருமானுக்குரிய ஷடசீதி புண்ணிய காலத்தில் அமைகிறது. இத்தகு புண்ணிய காலங்களில் செய்யப்பெறும் இறை வழிபாடு முன்னோர்கள் ஆசிகளைப் பெற்றுத்தரும் என்பது சாஸ்திரம். 

மார்கழி மாத பஜனை

17.12.2024 மார்கழி 02:  பரசுராம ஜெயந்தி

தலைசிறந்த முனிசிரேஷ்டரான  பரசுராமர் பூஜித்த தலங்களை வணங்குதல் நற்பலன்களைப் பெற்றுத்தரும். பரசுராமர் பூஜித்த சிவதலங்களுக்கு பரசுராமேஸ்வரங்கள் என்பது  பெயர். இவற்றுள் மிக முக்கியமானது மயிலாடுதுறை அருகிலுள்ள திருநின்றியூர். இத்தலத்தில்தான் பரசுராமரைப் பிடித்த மாத்ருஹத்தி தோஷம் நீங்கியது. 

பரசுராமர் மற்றும் அவரது தந்தை இருவரும் பூஜித்த சிவலிங்கங்களை இத்தலத்து லட்சுமிபுரீஸ்வரர் ஆலயத்தில் தரிசிக்கலாம்.

22.12.2024 மார்கழி 07: கிருஷ்ண பட்சம் -பானு சப்தமி 

06.01.2025 மார்கழி 22: சுக்ல பட்சம் - அபயபட்ச சப்தமி

 பொதுவாக  சூரிய வழிபாட்டிற்கு உரிய தினம் ஞாயிறு; உரிய திதி சப்தமி.  இந்த சப்தமி திதியானது ஞாயிற்றுக்கிழமையுடன் கூடி அமைகிற தினம் அபரிமிதமான நற்பலனை அளிக்கவல்ல  'பானுசப்தமி' ஆக அமைகிறது.  

மார்கசீர்ஷ மாதம் ( மார்கழி மாதம்) ஶுக்ல பக்ஷ (வளர்பிறை)  ஸப்தமி திதியில் தான் அதிதிக்கும் கஶ்யப மஹரிஷிக்கும் ஶ்ரீ ஸூர்யன் புத்திரனாக அவதரித்தார் என்பது புராணத் தகவல்.

சூரிய பகவான் பகல் முழுவதும் பூமிக்கு வெளிச்சம் கொடுப்பதால் திவாகரன் என்பதும்;  அனைவருக்கும் நெருங்கிய நண்பனாக அமைவதால் மித்ரன் என்பதும் சூரிய பகவான் ஏற்ற திருநாமங்கள்.

மார்கழி

இதனைச் சொல்லும் வடமொழிச் சுலோகம் கீழே ;

அதித்யாம் கஶ்யபாஜ்ஜக்ஞே மித்ரோ நாம திவாகர: ।

ஸப்தம்யாம் தேந ஸாக்யாதா லோகேஸ்மின் மித்ர சப்தமி ।। 

சப்தமி தினங்களில்  பலவித பத்ர,  புஷ்பங்களால் சூரியனை பூஜிப்பதும்;  ஆதித்ய ஹ்ருதயம், கோளறுபதிகம் போன்ற ஸ்தோத்திரங்களை  பாராயணம் செய்வதும்அதீத புண்ணிய பலன்களைத் தரும் என்பது பெரியோர் வாக்கு. 

இயன்றவர்கள் அருகிலுள்ள தொன் சிவாலயங்களில் சூரிய பகவான் சந்நிதியில் தீபமேற்றி வணங்கிட அதீத நற்பலன்கள் ஏற்படும்.

மேலும், நெய்  மற்றும் மாவு சேர்த்து செய்யப்பட்ட பண்டங்களையும், தேனையும்  சூரியபகவானுக்கு நிவேதித்து, எளியவர்களுக்கு விநியோகம் செய்திட  தீராத கடும் வியாதிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கப் பெற்று, ஆயுள் ஆரோக்யம் மேம்படும் என்பது பலன். 

23.12.2024 மார்கழி 08 - சங்கராஷ்டமி

சிவபெருமானுக்குரிய அஷ்டமி விரத தினங்களில் மிகுந்த சிறப்பு வாய்ந்தது இந்த சங்கராஷ்டமி. மார்கழி மாதத்து  தேய்பிறையில் அமைவது இது. சிவபெருமானுக்குரிய அஷ்டமி விரதத்தினைத்  தொடங்க எண்ணுபவர்கள் இன்றைய தினத்தில் தொடங்குதல் வழக்கம்.

சங்கராஷ்டமி விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வும்; அழகான தோற்றமும்  கிடைத்திடும் என்பது பலன். இயன்றவர்கள் அக்னிபூர்வமாக உண்டான எட்டு விதமான  முறைகளில்  தீபம், தூபம், கற்பூரம், சாம்பிராணி, ஹாரத்தி ஆகிய நெருப்பை மூலமாகக் கொண்ட ஷோடச உபச்சாரங்கள் மற்றும் ஹோமம், அன்னம், விளக்கிடுதல் போன்ற முறைகளில் வழிபடுவதால்  உத்தமமான பலன்கள் உண்டாகும்.

28.12.2024 (மார்கழி 13) - சனிப் பிரதோஷம் (தேய்பிறை)

11.01.2025 (மார்கழி 27) - சனிப் பிரதோஷம் (வளர்பிறை)

இவ்வருடத்திய தனுர் மாதத்தில் இரண்டு சனி பிரதோஷங்கள் அமைவது சிறப்பு. பலவித காய்கள் சேர்த்த கதம்ப சாதத்தினை நந்தியெம்பெருமானுக்கு நிவேதித்தல் சிறப்பு. 

30.12.2024  -  மார்கழி 15 - ஹனுமத் ஜெயந்தி 

ஆஞ்சனேயர் வழிபாட்டிற்கு உரிய தினம்.

-சர்வ அமாவாசை : நீத்தார் நீர்க்கடனாற்றுதலும்; பூசணிக்காயை அந்தணருக்குத் தானமாக அளிப்பதும்  பித்ரு தோஷங்கள் ஏற்படாத வண்ணம் காத்திடும். 

மார்கழி ஸ்பெஷல்

- அமாசோம பிரதட்சிணம்

அமாவாசையும்; திங்கள் கிழமையும் சேர்ந்து அமைகிற புண்ணியதினம். இன்றைய தினத்தில் அச்வத்த நாராயண பூஜை செய்வதும்;  அதிகாலையில் அச்வத்த விருக்ஷம் எனப்படும் அரச மரத்தினை வலம் செய்வதும் அளப்பறிய நற்பலன்களை அள்ளித் தந்திடும். 

02.01.2025 (மார்கழி 18)

திருவோணம் - மார்கழியில் அமையும் திருவோணத்தன்று பெருமாளை வழிபடுவது கூடுதல் நற்பலன்களை அளித்திடும்.

04.01.2025 - தனுர் வியதிபா (மார்கழி 20)

ஒரு மாதத்திற்கு 27 நக்ஷத்திரங்கள் கிரமமாக தோன்றுவது போல, 27 யோகங்களும் தோன்றுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் இந்த வ்யதீபாத யோகம். மாதத்திற்கு ஒன்று எனக் கணக்கிடப் பட்டாலும்,   ஏறக்குறைய 13 வவ்யதீபாத தினங்கள் ஒரு வருடத்திற்கு ஏற்படுகின்றன. 

இந்த வியதீபாதமானது யோகம் என்று சொல்லப்பட்டாலும், சுப யோகத்திற்கு உரியதாகக் கருதப்படுவதில்லை. இதனை  அசுப யோகம் என்றே சாஸ்திர நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே, இத்தகைய தினங்கள் சுப விசேஷங்களுக்கு உரிய தினங்கள் அன்றி, மாறாக பித்ரு காரியங்களான தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் போன்றவைகளுக்கு மிகச் சிறப்பான தினங்களாகக்  கருதப் படுகின்றன. இவற்றுள் மார்கழி மாதத்தில் வரும் வியதீபாத தினம் 'மஹாவ்யதீபாதம்' என்று சிறப்பிக்கப் படுகின்றது. 

அமாவாசை, வருடப்பிறப்பு, அயனப் பிறப்பு, மாதப் பிறப்பு, இன்னபிற...என  ஒரு வருடத்திற்கு இந்துக்கள்  செய்யவேண்டிய 96 தர்ப்பண தினங்களில் இந்த 'வ்யதீபாத' தினங்களும் அடக்கம் என்பதும் குறிப்பிடத் தக்கது. வியதிபாதத்திற்கு உரிய தெய்வம் சிவபெருமான். எனவே இன்றைய தினத்தில் செய்யப்படும் சிவ வழிபாடுகள் பித்ருதோஷங்களைப் போக்கிடவல்ல சக்தி கொண்டவை‌ .

13.01.2025 (மார்கழி 29) தனுர்பூஜை பூர்த்தி -போகி - பௌர்ணமி

ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு இன்னின்ன அபிஷேகங்கள் உகந்தவை என்பது ஒருவித கணக்கீடு. அவ்வகையில் மார்கழி மாத பௌர்ணமி அன்று நெய்யினால் அபிஷேகம் செய்து இளஞ்சூடான வெந்நீறு கொண்டு நீராட்டு செய்து கம்பளி சாற்றி வழிபடுவது மரபு. 

மார்கழி மகிமைகள்

இந்த தொன்முறை வழிபாடு திருவாவடுதுறைக்கு அருகில் உள்ள திருக்கோழம்பம் (திருக்குளம்பியம்) தலத்தில் மிக விசேஷம். தவிர இது சித்தர்களால் சொல்லப்பட்ட வியதிபாத வழிபாட்டிற்குரிய தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

போகி என்கிற இந்திரனுக்குரிய வழிபாட்டு தினம்.  

சர்க்கரைப் பொங்கல், வடை மற்றும் பூசணி சேர்த்த கூட்டு இவைகளை நிவேதிப்பது விசேஷம்.   ஒரு சல்லடையின்மேல் பூசணி இலையினை பரப்பி அதன்மேல் நிவேதனங்களை பரப்பி வைத்து வழிபடுவது மரபு. 

இத்தனை சிறப்பு வாய்ந்த விரதங்களும் வழிபாடுகளும் இந்த மார்கழி மாதத்தில் நிறைந்து இருப்பதால்தான் என்னவோ ஸ்ரீகிருஷ்ணர் 'தானே மார்கழியாக இருப்பதாக சொல்லி இருக்கிறார். மேலும் சகல தெய்வங்களும் கண்ணன் அம்சம் என்பதும் காரணமாகவும் இருக்கலாம்.

திருப்பரங்குன்றம்: மலை மேல் ஒளிர்ந்த கார்த்திகை மகா தீபம் - கும்பிட்டு பரவசமடைந்த பக்தர்கள்!

கார்த்திகை தீபம்கார்த்திகை தீபம்கார்த்திகை தீபம்கார்த்திகை தீபம்கார்த்திகை தீபம்கார்த்திகை தீபம்கார்த்திகை தீபம்கார்த்திகை தீபம்கார்த்திகை தீபம்கார்த்திகை தீபம்கார்த்திகை தீபம்கார்த்திகை தீபம்கார்த்தி... மேலும் பார்க்க

திருநெல்வேலி: கார்த்திகை சோமவார வழிபாடு; பஞ்ச தீபாராதனையில் கைலாசநாதர் தரிசனம்..! | Photo Album

திருநெல்வேலி: கைலாசநாதர் சுவாமிக்கு தீப ஒளியில் நடைபெற்ற கார்த்திகை சோமவாரம் பஞ்ச தீபாராதனை விழா.!திருநெல்வேலி ஜங்ஷன், கைலாசநாதர் சுவாமி திருக்கோயில்திருநெல்வேலி ஜங்ஷன், கைலாசநாதர் சுவாமி திருக்கோயில்... மேலும் பார்க்க

20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா; குவிந்த பக்தர்கள்!

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தின் முதுமலை வனத்தில் அமைந்திருக்கிறது, பொக்காபுரம் மாரியம்மன் ஆலயம். புலிகள் வாழும் அடர்ந்த காட்டிற்குள் அமைந்திருக்கும் இந்த அம்மனை தமிழகம் மட்டுமன்றி கேரளா, கர... மேலும் பார்க்க

நெல்லை: திருக்கார்த்திகை பண்டிகைக்கு தயாராகும் களிமண் அகல் விளக்குகள்! | ஸ்பாட் விசிட் படங்கள்

நெல்லையில் திருக்கார்த்திகை பண்டிகைக்கு தயாராகும் களிமண் அகல் விளக்குகள்.! ஸ்பாட் விசிட் படங்கள்.! மேலும் பார்க்க