கோவை: `இசை, நடனம்... விளையாட்டு' - ஆர்.எஸ்.புரத்தில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்...
வாயுக் கசிவினால் 10 மாணவர்கள் மயக்கம்!
ராஜஸ்தான்: ஜெய்ப்பூரின் மஹேஷ் நகரிலுள்ள தனியார் பயிற்சி மையத்தில் வாயுக் கசிவினால் மயக்கமடைந்த 10 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (டிச.15) மாலை அந்தப் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களில் 10 பேருக்கு கடுமையான தலைவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் அனைவரும் மயக்கமடைந்ததினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், முதற்கட்டமாக எங்கிருந்து வாயுக்கசிவுக்கான காரணங்கள் குறித்து விசாரணையைத் துவங்கினர். முதலில், அந்தப் பயிற்சி மையத்தின் மேல் தளத்திலுள்ள சமையல் கூடத்திலுருந்து வெளியானதா என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில் பின்னர் அது இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், தொடர் இருமல் மற்றும் மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தற்போது நலமாக உள்ளதாக அந்த மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குள் இந்தச் சம்பவம் குறித்தச் செய்தி காட்டுத்தீப் போல பரவியதைத் தொடர்ந்து மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதாகக்கூறி அந்த பயிற்சி மையத்தை அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் முற்றுகையிட்டனர். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மாணவர்களுக்கு ஏற்பட்ட திடீர் மயக்கத்திற்கான காரணம் தற்போதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில் அந்தப் பயிற்சி மையத்திற்கு அருகிலிருக்கும் வடிகாலில் இருந்து வெளியான வாயு காரணமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.