நிகும்பலா ஹோமம்: தீங்கு உங்களை அணுகாதிருக்க சங்கல்பித்துக் கொள்ளுங்கள்
Modi vs Congress 'நேரு, இந்திரா காந்தியை சாடிய மோடி; காட்டமான காங்கிரஸ்' - அதகளமான நாடாளுமன்றம்
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, "காங்கிரஸின் ஒரு குடும்பம் அரசமைப்பிற்கு தீங்கு விளைவிக்கிறது. 75 ஆண்டுகளில் அந்த ஒரு குடும்பம் மட்டுமே 55 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அப்போது அரசியல் சாசனம் 75 முறை மாற்றப்பட்டது. அரசியல் சட்டம் என்ற ஒன்று இல்லையென்றால் என்னைப் போன்றவர்கள் எல்லாம் இந்த அவைக்கு வந்து இருக்க முடியாது. காங்கிரஸை சேர்ந்த ஒரு குடும்பம் மட்டுமே ஆட்சி செய்திருக்கும். நாட்டில் எமர்ஜென்சி காலம் கொண்டு வரப்பட்டது அரசியல் சாசனத்திற்கு முடிவுரை எழுதியது.
அரசியல் அமைப்பின் 25-வது ஆண்டில்தான் காங்கிரஸ் எமர்ஜென்சியை அமல்படுத்தியது. ஜனநாயகத்தில் ஏற்படுத்திய கறைகளை காங்கிரஸ் கட்சியால் கழுவ முடியாது. சட்டவிரோத கொள்கைகளால் இந்திரா ஜியின் தேர்தலை நீதிமன்றம் நிராகரித்தது. அவர் எம்பி பதவியை விட்டு விலக வேண்டியிருந்தது. அவர் கோபமடைந்து தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள நாட்டின் மீது அவசர நிலையை அமல்படுத்தினார்.
நாட்டில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி இந்தியாவின் கருப்பு பக்கம் ஆகும். இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மிக நீண்ட கடிதங்களை எழுதியவர் முன்னாள் பிரதமர் நேரு ஆவார். நாடாளுமன்றத்திலும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசியவர்கள் காங்கிரஸ் கட்சியினர்தான். வாக்கு வங்கி அரசியலுக்காக பட்டியலின, பழங்குடியின மக்களை வஞ்சித்ததும் காங்கிரஸ்தான். அவர்கள் மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் மிக நீண்ட விவாதங்களை நடத்தினார்கள்.
இன்று மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களின் மையமாக பெண்கள் உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டின் குடியரசுத் தலைவரே பழங்குடியின வகுப்பை சேர்ந்த ஒரு பெண்தான். அரசியலமைப்பில் பெண்களுக்கு முதலில் அதிகாரம் வழங்கியது நமது இந்தியாதான். இந்தியாவை மேலும் வலிமைபடுத்தவே 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. இதில் கூட காங்கிரஸ் கட்சியினர் விஷத்தை விதைக்க முயன்றனா்" என்றார்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரியங்கா காந்தி, "அரசியலமைப்பு சட்டத்தை நினைப்பது போல பா.ஜ.க மாற்றி வருகிறது. நமது அரசியலமைப்பு சட்டம் மக்களின் உரிமை, ஒற்றுமை, நீதியை பாதுகாக்க கூடியது. ஆனால் ஆளும் பா.ஜ.க அரசு அதனை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக்கொண்டு வருகிறது. விவசாயிகள் ஆதரவாக உள்ளோம் என சொல்லிக்கொண்டு விவசாய சட்டங்களை தொழிலதிபர்களுக்கு சாதகமாக பாஜக மாற்றியுள்ளது.
அதானி என்ற ஒற்றை மனிதருக்காக பா.ஜ.க அரசு வேலை பார்த்து வருகிறது. விமானநிலையங்கள், சாலைகள், ரயில்வே பணிகள், சுரங்கங்கள் என அனைத்தும் அதானியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிக்கும் நேருவை குறை சொல்லும் பா.ஜ.க எப்போது நிகழ்காலத்தை பற்றி சிந்திக்க போகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த எதிர்க்கட்சிகள் வைக்கும் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. அதற்கு மாறான செயல்களில் மட்டும் பா.ஜ.க அரசு ஈடுபட்டு வருகிறது" என கொதித்தார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, "ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வுக்கு ஆர்.எஸ்.எஸ்தான் மூலமாக இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றியும் இந்தியா எவ்வாறு இயங்க வேண்டும் என்பது பற்றியும் ஆர்எஸ்எஸ்ஸை உருவாக்கிய தலைவர் சாவர்க்கர் கூறியிருப்பதை நான் இங்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். அதில், "மனுஸ்மிருதி பல நூற்றாண்டுகளாக நமது தேசத்தின் ஆன்மீக மற்றும் தெய்வீக பயணத்தின் குறியீடாக இருக்கிறது. நமது இந்து தேசத்தில் வேதங்களுக்குப் பிறகு மிகவும் மதிப்புமிக்கதாக இருப்பது மனுஸ்மிருதிதான். நமது கலாசாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனை மற்றும் நடைமுறையை இது பிரதிபலிப்பதாக இருக்கிறது.” என்றுதான் சாவர்க்கர் கூறியுள்ளார்.
அவரது எழுத்துகளில் அரசியலமைப்புச் சட்டம் குறித்து எதுவும் இல்லை. அதாவது, ’அரசியலமைப்புச் சட்டப் புத்தகம், மனுஸ்மிருதி புத்தகத்தால் முறியடிக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இப்போது கேள்வி என்னவென்றால், ஆளும் கட்சியாக இருக்கும் நீங்கள், அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்று பேசுகிறீர்கள். அப்படியென்றால், நீங்கள் உங்கள் தலைவர் சாவர்க்கரை கேலி செய்கிறீர்களா? அவருடைய எழுத்தை அவமானப்படுத்துகிறீர்களா?" எனக் கொதித்தார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "எமர்ஜென்சியை அமல்படுத்தியது தவறு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உங்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தின் மீது என்ன நம்பிக்கை இருக்கிறது. மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளபடி நடந்துகொள்ள வேண்டும் என்று தானே உங்களது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர்களது வலியுறுத்தலின்படி ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் 20 ஆண்டுகள் தேசிய கோடியை ஏற்றாமல், காவிக்கொடியை ஏற்றினீர்கள். மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில்தான் பெயர் வைக்கப்படுகிறது. பல நேரங்களில் நீதிமன்ற உத்தரவுகளையே மதிக்காமல் நடக்கிறீர்கள். பிறகு எப்படி நீங்கள் அரசியலமைப்பு சட்டம் குறித்து பேசுகிறீர்கள்?" என்கிறார்.