மகாராஷ்டிரா: சரத் பவார், அஜித் பவார் சந்திப்பு... இணைய விரும்பும் பவார் குடும்பம் - சாத்தியமா?!
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. அஜித் பவார் பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களுடன் சென்று தேசியவாத காங்கிரஸ் கட்சியை தன்வசப்படுத்திக் கொண்டார். இதனால் சரத் பவார் புதிய தேர்தல் சின்னத்துடன் மக்களை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
எனினும் மக்களவை தேர்தலில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.
இத்தேர்தல் தோல்வியால் சரத் பவார் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு சரத் பவார் தனது 84வது பிறந்த நாளை கொண்டாடினார். அவர் டெல்லியில் இருந்த போது துணை முதல்வர் அஜித் பவார் தனது மனைவி, மகன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று சரத் பவாரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து இரு அணிகளும் ஒன்றாக இணையவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கு முதல் ஆளாக குரல் கொடுத்திருப்பவர் சரத் பவாரின் பேரனான எம்.எல்.ஏ ரோஹித் பவாரின் தாயார் சுனந்தா பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைந்த போது பவார் குடும்பம் சரத் பவாருக்கு ஆதரவாக நின்றது. ஆனால் இப்போது சுனந்தா பவார் இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ''இரண்டு அணிகளும் ஒன்றாக சேரும் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் கட்சி தொண்டர்கள் இரு அணிகளும் ஒன்றாக சேர வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களது உணர்வு நியாயமானதுதான். நாம் பிரிந்திருந்தால் நமது பலத்தை இழப்போம். சேர்ந்திருப்பதுதான் உண்மையான பலம். கட்சியும், குடும்பமும் ஒன்று சேர்ந்தால் மிகவும் நல்லது'' என்றார். சுனந்தா பவார் தீவிர அரசியலில் ஈடுபடுவது கிடையாது. ரோஹித்பவார் சரத்பவாரின் ஒன்றுவிட்ட பேரன் ஆவார்.
சுனந்தா பவாரின் கருத்து குறித்து அவரது மகன் ரோஹித் பவார் கூறுகையில், ``அவரின் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு மருமகளாக ஒரு குடும்பம் ஒன்றுமையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார். நானும் 37 ஆண்டுகளாக இந்த குடும்பம் ஒற்றுமையாக இருந்ததை பார்த்திருக்கிறேன். எனவே இருவரும் ஒன்று சேருவதை குடும்ப உறுப்பினர்கள் விரும்புவது இயற்கைதான்” என்றார்.
தேசியவாத காங்கிரஸ் தொண்டர்களும் இரு அணிகளும் ஒன்று சேரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அங்குஷ் கூறுகையில்,''சரத்பவாருடன் அஜித்பவார் சந்தித்து பேசிய பிறகு இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என்று கட்சி தொண்டர்கள் விரும்புகின்றனர். ஆனால் இணைப்பு அல்லது சேருவது குறித்து கட்சி தலைவர்தான் இறுதி முடிவு எடுப்பார்.” என்றார்.
அஜித்பவார் கட்சியினரும் இதே கருத்தையே வலியுறுத்தி இருக்கின்றனர். இது குறித்து அஜித்பவார் கட்சியின் புனே தலைவர் தீபக் கூறுகையில்,'' இரு அணிகள் இடையே ஏராளமான ஒற்றுமைகள் இருக்கிறது. சரத் பவாரும், அஜித் பவாரும் சந்தித்து பேசிய பிறகு இருவரும் இணையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்யவேண்டும்''என்று தெரிவித்தார்.
அடுத்த சில மாதங்களில் மகாராஷ்டிராவில் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. அதற்குள் இரு அணிகளும் இணையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் சரத்பவாரை தான் சந்தித்து பேசியது அரசியல் ரீதியான ஒன்று கிடையாது என்றும், குடும்ப சந்திப்பு என்றும் அஜித் பவார் தெரிவித்தார். பா.ஜ.க வும் சரத் பவார் அஜித்பவாருடன் சேர்ந்து தங்களது கூட்டணிக்கும் வரவேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதாக ஒரும் தகவலும் உள்ளது.
இந்த இணைப்பு சாத்தியமா என்பதை காலம் தான் பதில் சொல்லும்..!