தனது தோல்விகளை மறைக்க நேரு மீது பிரதமா் மோடி வீண் பழி: காங்கிரஸ் விமா்சனம்
புதுதில்லியில் மால்டோவா தூதரகம் திறப்பு!
புதுதில்லி: இந்தியாவிற்கான கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவா குடியரசின் தூதரகம் நேற்று புதுதில்லியில் திறக்கப்பட்டது.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அழைப்பை ஏற்று இரண்டு நாள்கள் (டிச.15 &16) அரசு பயணமாக மால்டோவா குடியரசின் துணை பிரதமரும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சருமான மிஹைல் பாப்சை இந்தியா வந்தார்.
அவரது வருகையைத் தொடர்ந்து நேற்று (டிச.15) புதுதில்லியில் புதியதாக கட்டப்பட்டுள்ள மால்டோவா குடியரசுக்கான இந்தியத் தூதரகத்தை இருநாட்டு அமைச்சர்களும் இணைந்து திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், மால்டோவா துணை பிரதமரின் வருகை ஒரு முக்கியமான நிகழ்வு எனவும் புதுதில்லியில் மால்டோவா தூதரகம் திறக்கப்பட்டது இருநாட்டு ராஜாந்திர உறவுகளை மேம்படுத்தக்கூடிய ஒரு புது அத்தியாயத்தின் துவக்கம் எனவும் இதன் மூலம் இரண்டு வளர்ந்து வரும் நாடுகளும் முக்கியத் துறைகளில் ஒன்றாக பங்களித்து செயலாற்ற முடியும் எனவும் கூறினார். மேலும் விரைவில் மால்டோவா நாட்டில் இந்திய தூதரகம் திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
உக்ரைனுடனான ரஷியப் போரின் போது அங்கு சிக்கித்தவித்த இந்திய மாணவர்களை மீட்க இந்தியா மேற்கொண்ட ஆப்பரேஷன் கங்காவில், மால்டோவா குடியரசின் நினைவு கூறத்தக்க உதவியை இந்தியா ஒருபோதும் மறக்காது எனவும் அவர் கூறினார்.
இந்தச் சந்திப்பில் இருநாடுகளுக்கு மத்தியிலான ஒத்துழைப்புகள் பற்றியும், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைப் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் மத்தியிலான இடம்பெயர்வு மற்றும் இயக்கத்திற்கான கூட்டமைப்பு பிரகடனம் கையெழுத்தானது.