சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன்: சர்ச்சைக்கு இளையராஜா பதில்!
குடும்ப வன்முறை: பெண்களால் துன்புறுத்தப்படும் ஆண்கள் - `My Wife, My Abuser’ ஆவணப்படமும் ஆய்வுகளும்
‘குடும்ப வன்முறை’ என்றவுடன் ஓர் உயரமான, கட்டுமஸ்தான ஆண், அவரின் பெண் துணையை துன்புறுத்துவதுதான் நம் கண் முன்னால் நிழலாடும். செய்திகளிலும் அதுவே சொல்லப்படும். சினிமாவிலும் அவையே காட்சியாகும். நாம் நம் அக்கம்பக்கத்திலும் அதிகம் பார்ப்பதும் அத்தகையை குற்றங்கள் தான். திருமண உறவிலும், காதல் உறவிலும் பெண்ணை ஆண் துன்புறுத்துவதே அதிகமாக நடக்கிறது.
ஆனால், ‘My Wife, My Abuser’ என்ற ஆவணப்படம் சேனல் 5-ல் வெளியாகி அண்மையில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் டாப் ஸ்லாட்டில் இடம்பெற்றது. இந்த ஆவணப்படமானது ரிச்சர்ட் ஸ்பென்ஸர் என்பவர் தனது மனைவியால் 20 ஆண்டுகளாக அனுபவித்த வன்கொடுமைகளை பிரதிபலித்திருந்தது. அத்தனை அத்துமீறல்களும் அவரது 3 குழந்தைகள் காண அரங்கேறியதாக ரிச்சர்ட் வேதனையுடன் அதில் பகிர்ந்துள்ளார்.
பெண்களை வன்கொடுமையாளர்களாக, குற்றவாளிகளாக சித்தரிக்கும் கதைகள் பெரிதாக ஊடக வெளிச்சத்துக்கு வருவதில்லை. அதனால், அப்படியான கதைக்களத்துடன் வரும் படைப்புகள் மீது சந்தேகப் பார்வைகளே அதிகமாக விழுகின்றன.
இது குறித்து நாட்டிங்ஹாம் ட்ரென்ட் பல்கலைக்கழகத்தின் ஃபாரென்ஸிக் சைக்காலஜி அண்ட் ஃபாரென்ஸிக் மென்ட்டல் ஹெல்த் துறையின் முதன்மைப் பேராசிரியர் ஜெனீஃபர் மெக்கே கூறும்போது, “நான் குடும்ப வன்முறையை நிகழ்த்துபவர்கள் குறித்து 10 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதன்படி ஆண்களுக்கு நிகராக பெண்களும் தங்களின் வாழ்க்கைத் துணையை, காதல் இணையை கொடுமைப்படுத்துவதில் சளைத்தவர்கள் இல்லை.
உலகம் முழுவதும் குடும்ப வன்முறை நிகழ்வுகளின் எண்ணிக்கையைப் பற்றி நான் இங்கே பேச விழையவில்லை. அது உண்மையில் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. ஆனால், குடும்ப வன்முறை என்பது ஆண்களால் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் குற்றம் என்று மட்டுமே பொது புத்தியில் பதியச் செய்யப்படுவது, ஆண்கள் என்பதாலேயே சிலர் அனுபவிக்கும் குடும்ப வன்முறை கண்டுகொள்ளப்படாமல் போவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்பதே எனது கவலை” என்கிறார்.
குடும்ப வன்முறை எது என்ற வரையறை ஆணுக்கும், பெண்ணுக்கும் மாறுபடுகிறது!
இங்கிலாந்திலும், வேல்ஸிலும் குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் மூன்று பேரில் ஒருவர் ஆண் என்கிறது புள்ளி விவரம். 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 2.1 சதவீதம் பேர் தங்கள் இணையால் வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர். இது 2023 மார்ச் மாதம் நிறைவின்போது எடுக்கப்பட்ட புள்ளிவிவரம். இதே காலகட்டத்தில் குடும்ப வன்முறைக்கு உள்ளான பெண்களின் சதவீதம் 4 என்பதும் பதிவு செய்யக்கத்தக்கது.
குடும்ப வன்முறை எது என்ற வரையறை ஆணுக்கும், பெண்ணுக்கும் மாறுபடுகிறது. ஆண்களிடம் அது பற்றி விசாரிக்கும்போது, தங்களை தங்கள் இணையர் நினைத்தபடி ஆட்டுவிப்பது, தனிமைப்படுத்துவது, அடக்கி ஆள்வது ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றனர். சிலர் உடல் ரீதியான துன்புறுத்தல்களைப் பட்டியலிடுகின்றனர். இத்தகைய வன்முறைகள் நீண்ட காலம் நிகழும்போது அது அவர்களின் மனதிலும், உடலிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பெண்களைப் போலவே குடும்ப வன்முறையில் ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து மேலும் விவரித்த பேராசிரியர் ஜெனீஃபர் மெக்கே, “குடும்ப வன்முறை தொடர்பான ஆய்வில் பங்கேற்றவர்களிடம் நாங்கள் நடத்திய ஆலோசனைகளின் போது, சில விஷயங்களை வன்முறை என்று பொதுவெளியில் யாரும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத நிலை இருப்பதாகக் கூறுகின்றனர்.
ஆண்களை வன்முறையாளர்கள் என்று கூறும்போது, அவர்கள் மீதான பார்வையும், ஒரு பெண்ணை அவ்வாறு கூறுவதிலேயே இருக்கும் முன்முடிவையும் சிலர் குறிப்பிடுகின்றனர். பெண்கள் குடும்ப வன்முறையாளர்களாக அடையாளப்படுத்தப்படுவது மிக மிக அரிது.
நாம் சமூகத்தில் கட்டமைத்து வைத்துள்ள பார்வைகளால், புரிதல்களால் பாலினம் மட்டுமல்ல, வயதும் கூட இவர் வன்முறையாளராக இருக்க மாட்டார் என்று ஏற்க வைக்கிறது. வயதுவந்தோர் இடையே நிகழும் வன்முறைகள் போல் வளரிளம் பருவத்தினர் மத்தியிலும் வன்முறை நிலவுகிறது. ஆனால் இதெல்லாம் கொஞ்சமும் பேசப்படுவதில்லை.
17 வயது நபர் ஒருவர் அவரது காதலியை கொலை செய்ததாக கைது செய்யப்படுகிறார். அப்போது அந்தப் பெண்ணுக்கு வயது 15. கொலையை நிகழ்த்தியவருக்கு வயது 16. ஒராண்டுக்குப் பின்னர் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்படுகின்றார். அதன் பின்னர் அரசாங்கம் குடும்ப வன்முறை தொடர்பான வயது வரம்பை மாற்றுவது குறித்து பரிசீலிக்கிறது. அதன்படி குற்றவாளி, பாதிக்கப்பட்டவர் இருவருக்கும் வயது 16 என்றால் அந்த வழக்கை குடும்ப வன்முறை வழக்காகவும் பதிவு செய்கிறது.
வளரிளம் பருவத்தினருக்கு மத்தியில் நிலவும் டேட்டிங் வன்முறை தொடர்பான புள்ளிவிவரங்கள், உலகம் முழுவதுமே 21 சதவீத இளைஞர்கள் பாலின பேதமின்றி இத்தகைய வன்முறைக்கு ஆளாகின்றனர். ஆனாலும் உடல் ரீதியான துன்புறுத்தல்களை செய்வது ஆண்களே அதிகம் என்றும் அந்த புள்ளிவிவரம் சுட்டிக் காட்டுகின்றது. பாலியல் வன்முறையை நிகழ்த்துவதில் சிறுவர்களே முன்னிலை வகிக்கின்றனர். இங்கே சிறுமிகள் பெரும்பாலும் பாதிக்கப்படுபவராகவே இருக்கின்றனர்” என்று விவரிக்கிறார் பேராசிரியர் ஜெனீஃபர் மெக்கே. இது குறித்து அவர் மேலும் சில ஆய்வுப் பார்வையை கட்டுரை வடிவில் முன்வைக்கிறார்.
அதன் விவரம்:
வரலாற்றில் குடும்ப வன்முறை என்பது ஆணாதிக்கத்தின் விளைவாகவே காண்பிக்கப்படுகிறது. பெண்களை ஆண்கள் கட்டுப்படுத்த கையாளும் முறையாகவே விவரிக்கப்படுகிறது.
நாம் எப்போது பெண்களை பாதிக்கப்பட்டவர்களாக பார்ப்பதற்கு மட்டுமே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். ஆண்கள் வன்முறையை நிகழ்த்துபவர்கள் என்றே சொல்லி வைக்கப்பட்டிருக்கிறோம். இந்த மாதிரியை உடைக்கும் விதமான உறவில் இருவர் இருக்கும்போது அங்கே ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்று பார்க்கக் கூட நாம் எத்தனிப்பதில்லை. மேலும், அத்தகைய உறவில் குடும்ப வன்முறை நிகழ்ந்தாலும் கூட அதை நாம் வன்முறையாகப் பார்ப்பதில்லை. இது சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மீது நம் பார்வை விழாமல் தடுக்கிறது.
தன்பாலின உறவாளர்கள்
அதேபோல், தன்பாலின உறவாளர்களாக இருப்பவர்களில் யார் வன்முறையாளர் என்பதைப் பார்க்கத் தவறிவிடுகிறோம். இது அத்தகைய உறவாளர்கள் மத்தியில் நிலவும் வன்முறையை ஒரு முற்றுப்புள்ளியோ, தீர்வோ இல்லாமல் நீடிக்கச் செய்யும். அதேபோல் அவர்கள் தங்களுக்கு நிகழும் வன்முறைகளை எங்கே எப்படி பதிவு செய்வது என்பதற்கான வழிகாட்டுதலையும், சரியான அமைப்பையும் உருவாக்க விடாமல் தடுக்கிறது.
பாலின பாகுபாடுகளின் காரணமாக ஆண்கள் குடும்ப வன்முறையில் சிக்கி உயிரிழக்கும் போக்கு அதிகரிப்பதை அண்மைய ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.
குடும்ப வன்முறை என்பது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு மட்டுமே, ஆண்கள் மட்டுமே குற்றவாளிகள் என்ற பார்வையைத் தாண்டி நாம் யோசிக்கும் போது பிரச்னையின் வேரை அணுகி தீர்வுகளைக் காண உதவும். குடும்ப வன்முறையை விளக்குவதற்கு ஆபத்து காரணிகளின் சிக்கலான தொடர்பு மீண்டும் மீண்டும் விளக்கி எடுத்துரைக்கப்படுகிறது.
குழந்தைப் பருவத்தில் சந்தித்த மோசமான அனுபவங்கள் உறவுகளை கையாள்வதில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு தனிநபரின் குணமும் கூட அவர்கள் தங்களின் உறவுகளை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதை முடிவு செய்யும்.
போதை வஸ்துக்களைப் பயன்படுத்துதல் குடும்ப வன்முறையை நிகழ்த்தத் தூண்டுகிறது. மனநலன் சார்ந்த பிரச்னைகளும் வன்முறையைத் தூண்டுகிறது. உணர்ச்சிகளைக் கையாள்வதில் சிக்கல் இருந்தால் அது நிச்சயமாக ஒருவருக்கு உறவுகளைக் கையாள்வதிலும் சிக்கலைத் தரும். பாதுகாப்பற்ற உணர்வு ஆதிக்கம் செலுத்தத் தூண்டுவதோடு வன்முறையையும் ஊக்குவிக்கும்.
இத்தகைய சிக்கலான விவகாரத்தை பாலின பேதத்துடன் அணுகுவதால் பாதிக்கப்படும் ஆண்கள் தங்களின் வேதனைகளை வெளியே முன்வந்து சொல்வதற்கு தயக்கத்தைக் கூட்டுகிறது. தான் குடும்ப வன்முறைக்கு ஆளாவதாக ஓர் ஆண் கூறினால் ஒன்று, அவர் கிண்டல் செய்யப்படுகிறார், இல்லாவிட்டால் அவரது வார்த்தைகள் நம்பப்படாமல் போகிறது.
பாதிக்கப்பட்டவர்களாகவே அங்கீகரிக்காதபோது..!
குடும்ப வன்முறை தொடர்பான ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கவனித்த வரை குடும்ப வன்முறைக்கு ஆளாகும் ஆண்கள் தங்களுக்கு உதவி கேட்பதற்கான கட்டமைப்புகள் இங்கே இல்லை என்கின்றனர். அவர்களை பாதிக்கப்பட்டவர்களாகவே அங்கீகரிக்காதபோது அவர்களுக்கான உதவி மையங்கள் உருவாவது எங்கே என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சில இடங்களில் பாதிக்கப்பட்ட நபர் ஆணாக இருக்கையில் சமூக கட்டமைப்புகளால் அவரையே குற்றவாளி என கைதும் செய்யும் சம்பவங்களும் நடக்கின்றன.
இத்தகைய சமூகப் பார்வைகள், பெண்கள் தாங்கள் செய்வது தவறு என்பதை சுயபரிசோதனைக்கு உட்படுத்தி உறுதி செய்து அதிலிருந்து வெளியே வருவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்வதையும் தடுத்துவிடுகிறது.
பிரிட்டனைப் பொறுத்தவரை குடும்ப வன்முறையில் ஈடுபடும் பெண்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும், வழிகாட்டுதல்களை நல்கும் கட்டமைப்புகள் மிக மிக சொற்பமாகவே உள்ளது.
பாலினம், வயது பேதமின்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களுக்கான உதவியைப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டுமெனில், அதற்கு குடும்ப வன்முறைகளை உண்மையாக, ஆழமாக அனைத்து கோணங்களிலும் அணுகும் நடைமுறை புழக்கத்துக்கு வர வேண்டும்.
பாதிக்கப்பட்ட ஓர் ஆண் கூறும் சாட்சிகளைப் பதிவு செய்வதால் அது பெண்களுக்கு நிகழும் குடும்ப வன்முறைகளுக்கு எதிரான செயல்பாடுகளைக் குறைத்துவிடும் என்று கருதுவது சரி அல்ல. மாறாக, பரந்துபட்ட பார்வையானது குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவர் மீது சமூகத்தின் பச்சாதாபம் படர்வதையும், சமத்துவத்தை ஊக்குவிப்பதையும் செய்யும். இதன் மூலம் அனைத்து விதமான குடும்ப வன்முறைகளுக்கும் எதிரான போராட்டக் குரல் வலுப்பெறும் என்ற பேராசிரியர் ஜெனீஃபர் மெக்கேவின் பார்வை மிக முக்கியமானது.!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...